கோவில் திருவிழாக்களை மாலையுடன் நடத்தி முடிக்குமாறு அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

கோவில் திருவிழாக்களை மாலையுடன் நடத்தி முடிக்குமாறு அறிவிப்பு

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கோவில் திருவிழாக்களை மாலை வேளையுடன் நடத்தி முடிக்குமாறும், இரவு வேளையில் இடம்பெறும் கலை நிகழ்வுகளை இடைநிறுத்துமாறும் கோவில் நிர்வாகத்தினர்களுக்கு, தென்மராட்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. 

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் செயலாளர் திருமதி தேவந்தினி பாபு தலைமையில் நேற்று (30) கலந்துரையாடல் இடம்பெற்றதைத் தொடர்ந்து, குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

வரலாற்றுச் சிறப்புமிக்க வரணி சிட்டிவேரம் கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இக்கூட்டம் நடத்தப்பட்டது. 

இக்கூட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோவில் நிர்வாக உறுப்பினர்கள், சுகாதாரத் திணைக்களத்தினர், பொலிஸார், படையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் கோவில்களில் மகோற்சவத் திருவிழாக்கள் ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், கோவில்களுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகையால், கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வரவேண்டும் என்பதோடு, அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் அணிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, கோவில்களுக்கு வரும்போது பொதிகள் கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் பக்தர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மயூரப்பிரியன் - யாழ். நிருபர்

No comments:

Post a Comment