ஜெனீவா விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்தை விமர்சித்துள்ள அமைச்சர் மங்கள சமரவீரவை உடனடியாக அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மங்கள சமரவீர, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்குச் சென்ற பிரதிநிதிகள், அங்கு வெளியிட்ட கருத்துக்கள் பிழையானது எனக் கூறியுள்ளார்.
அவர்களது கருத்தானது அரசாங்கத்துக்கு பாதிப்பு என்று தெரிவித்துள்ளதோடு, இலங்கை பிரதிநிதிகளுக்கு கடுமையான கண்டனங்களையும் அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், ஜெனீவா விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்தும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இது தொடர்பாக தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ள நிலையில், மங்கள சமரவீர இது தொடர்பாக ஜனாதிபதிக்கு நன்றாகத் தெரியும் என்றுக் கூறியுள்ளார்.
அதாவது, 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஜனாதிபதியின் அனுமதியுடன்தான் இலங்கை இணை அனுசரணை வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், மங்கள சமரவீர தற்போது வெளிவிவகா அமைச்சர் அல்ல. அத்தோடு, இந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் அல்ல.
நிதியமைச்சராக இருந்துக்கொண்டு, வெளிவிவகார அமைச்சின் வேளையைத் தான் அவர் செய்து கொண்டுள்ளதோடு, ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படியான ஒருவர் இனியும் அமைச்சுப் பதவியில் இருக்க வேண்டுமா என்பதை ஜனாதிபதியும் ஏனைய தரப்பினரும் சிந்திக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment