போக்குவரத்து விதி மீறல்களுக்கு அறவிடப்படும் ஆகக்குறைந்த அபராதத்தை அதிகரிக்கும் வர்த்தமானி வெளியானது - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

போக்குவரத்து விதி மீறல்களுக்கு அறவிடப்படும் ஆகக்குறைந்த அபராதத்தை அதிகரிக்கும் வர்த்தமானி வெளியானது

போக்குவரத்து விதி மீறல்களுக்கு அறவிடப்படும் ஆகக்குறைந்த அபராதத்தை அதிகரிக்கும் நோக்கில் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்களை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. 

போக்குவரத்து மற்றும் சிவில் விமான அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய செல்லுபடியான வாகன சாரதிப் பத்திரம் இல்லாமல் பயணித்தல், மது மற்றும் போதைப் பொருள் பாவனையின் பின்னர் வாகனத்தைச் செலுத்தல், ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தல் உள்ளிட்ட ஏழு விதி மீறல்களுக்கான அபராதம் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

வாகனம் செலுத்துவதற்குரிய வயதின்றி வாகனத்தைச் செலுத்துவது மற்றும் செல்லுபடியான வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தைச் செலுத்துவதற்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவது, ரயில் கடவைகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்துவது, வாகனம் செலுத்தும்போது கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்ற விதி மீறல்களுக்கான அபராதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விதிகளை மீறி குற்றவாளியாக அடையாளம் காணப்படும் நபர்களிடம் 25 ஆயிரம் ரூபாவுக்கு குறையாமலும், 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகரிக்காமலும் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் தரம் அதே குற்றங்களை இழைக்கும்போது 30 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாலும் 40 ஆயிரம் ரூபாவுக்கு அதிகரிக்காமலும் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஆறு மாதங்களுக்கு மேற்படாமல் சாரதி அனுமதிப் பத்திரம் இடைநிறுத்தப்படும். 

மூன்றாவது தடவையாக குற்றமிழைக்கும் பட்சத்தில் 40 ஆயிரம் ரூபாவுக்குக் குறையாமலும், 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாமலும் அபராதம் விதிக்கப்படுவதுடன், 12 மாதங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட 20 வீதம் அதிக வேகத்தில் சென்றால் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாவரையும், 30 வீத அதிக வேகத்தில் சென்றால் 5 ஆயிரத்துக்குக் குறையாமலும் 10 ஆயிரத்துக்கு அதிகரிக்காமலும் அபராதம் விதிக்கப்படும். 50 வீதத்துக்கும் அதிகவேகத்தில் சென்றால் 10 ஆயிரத்துக்குக் குறையாமலும், 50 ஆயிரத்துக்கு மேற்படாமலும் அபராதம் விதிக்கப்படும்.

No comments:

Post a Comment