வடக்கு, கிழக்கு துரித அபிவிருத்திச் செயலணிக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் எந்தத் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று அறியமுடிகின்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிது நேரமே பங்கேற்றார் என்றும், அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் கலந்துரையாடினர் என்று கூறப்படுகின்றது.
ஊர் எழுச்சித் திட்டம் தொடர்பாகவும், ஐ ரோட் திட்டம் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. ஐ ரோட் திட்டங்கள் மே அல்லது ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, பருத்தித்துறை – கொடிகாமம் வீதி என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சீரமைப்பது என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
காணி விடுவிப்புத் தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது. அத்துடன் காணிகள் கையகப்படுத்தப்படுவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயங்களில் காத்திரமான முடிவுகள் எவையும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை.
பலாலி விமானத் தளத்துக்கு மேலதிக காணிகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் பேசியுள்ளனர். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராஜா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மக்களைக் குடியமர்த்திவிட்டு பின்னர் விமான நிலையத்தை விஸ்தரிக்கலாம் என்று அவர் கூறினார் என்றும், அவ்வாறு பின்னர் அபிவிருத்திக்காகக் காணி கையகப்படுத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார் என்றும் அறியமுடிகின்றது. அந்த விடயத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
கூட்டத்தில் அதிக நேரம் யாழ்ப்பாணம் தொடர்பான அபிவிருத்திகள் பற்றியே அதிகம் பேசப்பட்டன என்றும் அதனால் அதிருப்தியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கூட்டத்தின் இடைநடுவே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment