“மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவது குறித்து அழுத்தத்தைக் கொடுக்கும் வகையில் அரசுடன் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிக்க சிறுபான்மையினக் கட்சிகள் முன்வருவதே சாலச் சிறந்தது.” இவ்வாறு தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல என்றும் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை மிகவும் வரவேற்கத்தக்கது.
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்பது தொடர்பாகச் சிறுபான்மை கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மையினக் கட்சிகளும், ஜே.வி.பி. உட்பட முக்கிய கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக கரிசனம் காட்டியபோதும் இவ்விடயம் காலதாமதத்தை எதிர்கொண்டு வருகின்றது.
சட்டதிருத்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம் பிரதமர் நினைத்தால் ஒரே நாளில் இதற்கான தீர்வைப்பெற முடியும். தேர்தல் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற போர்வைக்குள் இரவோடு இரவாக சிறுபான்மையினரைப் பாதிக்கும் சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்த அரசுக்கு இதைச் செய்வதில் தயக்கம் ஏற்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களைத் தோற்றிவிக்கின்றன.
தற்போது அரசு தனது ‘பட்ஜட்’டை நிறைவேற்றுவதற்கு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் நிலையில் தமது ஆதரவை வழங்க முன்வரும் சிறுபான்மையினக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவது தொடர்பில் அரசுடன் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டு ‘பட்ஜட்’ நிறைவேற ஆதரவு அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களைப் பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும். அதேபோல் மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரை வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த விடயங்களில் உள்ள தடைகளைத் தகர்க்க முன்வர வேண்டும்.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும், ஆளுநர் மூலமாக ஆளுகைகளைக் கையாள்வது ஜனநாயகச் செயற்பாடு அல்ல, மாகாண சபை உறுப்பினர்களின் மூலமாகவே அதனைக் கையாள முடியும், மக்களுக்கான சேவையை மாகாண சபைகளில் மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் மூலமாகவே கையாள முடியும் என வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் பாராட்டுவதோடு, தற்போதைய சந்தர்ப்பத்தில் நான் முன்வைத்துள்ள கருத்தை அவர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
இன்று கிழக்கு மாகாணத்தில் சகலவிதமான அபிவிருத்திப் பணிகளும் தேக்கம் கண்டுள்ளன. நிதி ஒதுக்கீடுகள் இல்லாமை காரணமாக முக்கிய திட்டங்கள் முடங்கியுள்ளன. வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் நிலவுகின்றது. விவசாயம், மீன்பிடி போன்ற தொழில்துறைகள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இவற்றை நீக்கவேண்டுமாயின் மாகாண சபை உடன் இயங்கவேண்டும்” – என்றுள்ளது.
No comments:
Post a Comment