நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் ஒரு வருடத்துள் தீர்ப்பு வழங்கும் வகையிலும் அவ்வாறு ஒரு வருடத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட முடியாத வழக்குகளிலிருந்து சந்தேக நபர்களை விடுவிப்பதற்கும் நீதி அமைச்சு விரைவில் குறுகிய முறையொன்றை அறிமுகம் செய்ய வேண்டுமென வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக்மாரப்பன நேற்று பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று இங்கும் உயர்மட்டத்திலுள்ள நீதிமன்றங்கள் கீழ்நிலை நீதிமன்றங்களுக்கு வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு ஏற்ற ஆலோசனைகள் உள்ளடங்கிய வழிகாட்டலை வழங்க முன்வர வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டில் ஒவ்வொரு வழக்கும் சுமார் 10 வருடங்கள் காலதாமதம் ஆவது மிகவும் கவலைக்குரிய விடயமென சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனால் மக்களும் நீதிமன்றங்களும் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.
நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் 99 சதவீதமானவை மிகவும் சிறிய குற்றங்களுக்காக தாக்கல் செய்யப்பட்டவையென்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அமைச்சர் திலக்மாரப்பன மேலும் தெரிவித்ததாவது நமது நாட்டில் ஒரு வழக்கு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சுமார் 10 வருடங்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்றதொரு நிலை உலகின் வேறெந்த நாட்டிலும் நடைமுறையில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளில் 99 சதவீதமானவை சிறிய குற்றங்களுக்கானவை. சிறியளவு கஞ்சா அல்லது சுருட்டு வைத்திருந்தமை அல்லது சிறிய காயங்கள் ஏற்படுத்தியவை போன்ற சம்பவங்கள் தொடர்பான வழக்குகளே 10 வருடங்களுக்கும் அதிக காலம் இழுத்தடிக்கப்படுகின்றன.
எனவே, அனைத்து வழக்குகளையும் ஒரு வருடத்துக்குள் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நீதி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் அந்த வழக்கை கைவிட்டு சந்தேக நபரை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான குறுகிய வழிமுறையை அமைச்சு முன்னெடுக்க வேண்டும்.
வெளிநாடுகளில் விரைவில் வழக்குகளை முடிப்பதற்காக உயர் மட்டத்திலுள்ள நீதிமன்றங்கள் கீழ் நிலையிலுள்ள நீதிமன்றங்களுக்கு வழிகாட்டல்களை வழங்கும். இந்நிலை இங்கும் முன்னெடுக்கப்படல் வேண்டும். வழக்குகள் ஒரு வருடத்துக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் நிலை உருவாக்கப்பட்டால்தான் சட்டத்தரணிகளும் பொலிஸாரும் விசாரணைகளை துரிதப்படுத்துவர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment