மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அளவுக்கு நாட்டில் வரட்சி நிலவுகின்ற இவ்வேளையில், மக்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயல்படுவது முக்கிமாகும்' என்று ருகுணு பல்கலைக்கழக சமூக விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எஸ். தேனபந்து கூறுகிறார்.
'எமது நாட்டில் மக்கள் அனைவரும் மின்சார உதவியுடனேயே அனைத்தையும் புரிகின்றார்கள். அதனால் மின்வெட்டு ஏற்படும் போது நாட்டின் அனைத்து பிரிவுகளும் பாதிக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையைப் போன்று தொழிற்சாலைகளின் இயக்கமும் பாதிப்படைகின்றன' என்றும் அவர் கூறுகின்றார்.
'தற்போது இரண்டு மூன்று மணித்தியாலங்கள் முன்னறிவிப்புடன் மின்வெட்டை அமுல் நடத்துகின்றார்கள். மின்னுற்பத்தி நிலையங்களிலும் பிரச்சினைகள் உள்ளதாகக் கூறுகின்றார்கள். மழையின்மையால் மின்வெட்டு அமுல் நடத்தப்படுகின்றது. இதற்கு முன்னரும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
நீண்ட நாட்கள் மழை பெய்யவில்லை. இவ்வாறான நிலைமையில் உடனடியாக மின்வெட்டை அமுல்படுத்தாமல் முன்னறிவித்தல் செய்த பின்னர் மின்வெட்டை அமுல்படுத்துவதே அரசின் பொறுப்பாகும். அவ்வாறு செய்தால் மக்கள் ஓரளவாவது ஆயத்தமாக இருப்பார்கள்.
அனைவரிடமும் ஜெனரேட்டர் இல்லை. இதனால் பாதிப்படைவது ஏழை மக்களேயாவர். பணக்கார வீடுகளில் ஏதேனும் மாற்று வழிகள் காணப்படும். ஆனால் இரவில் மின்வெட்டை அமுல் செய்தால் சில பிள்ளைகளால் பாடம் படிக்க முடியாமல் போகலாம். ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் உள்ளார்கள். அத்துடன் தவணைப் பரீட்சையும் நடைபெறுகின்றது.
சிலர் தங்களது வாழ்க்கையை கொண்டு செல்ல சிறிய கடைகளை நடத்துகின்றார்கள். அவர்களும் பாதிப்படையலாம். புதுவருடமும் வரவுள்ளது. கடைகளில் வியாபார மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளும் பாதிப்படையலாம்' என்று விளக்குகிறார் கலாநிதி தேனபந்து .
'அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் மின்வெட்டு காலத்தையாவது குறைத்திருக்கலாம். இவ்வாறான நிலைமை ஏற்படுமென அறிந்து முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம்.
இதேவேளை மக்கள் தரப்பிலும் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். 'சூரிய சக்தி சங்கிராமய' என அரசாங்கத்தால் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் கூரைகளில் சூரியப் படலத்தைப் பொருத்தி தங்களது மின் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இலங்கையின் மின் வலையமைப்புக்கும் மின்னை வழங்கலாம். மக்கள் இது குறித்து அக்கறை காட்டவில்லை.
ஹம்பாந்தோட்ட போன்ற பிரதேசங்களில் அரச நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் இதனை பாரிய அளவில் செயற்படுத்தலாம். அவை கொள்கை ரீதியாக அமுல் நடத்தப்பட வேண்டும். மக்கள் சூரிய சக்தியை பாவித்து மின்சாரத்தைச் சேமித்திருந்தால். இவ்வாறு மின்வெட்டை எதிர்நோக்க வேண்டியிருக்காது. தற்போது பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டும். அதற்காக நீண்ட காலத் தீர்வை அளிக்கக் கூடிய திட்டங்களில் மக்கள் கவனம் செலுத்தவில்லை.
அரசாங்கமும் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. நான் எனது வீட்டில் சூரியப் படலத்தை இணைத்துள்ளேன். அதன் மூலம் தேசிய கொள்கை என்ற ரீதியில் ஒவ்வொரு நாளும் மின்சார சேமிப்புக்கு பங்களிப்புச் செய்கின்றேன். இவ்வாறான திட்டங்களுக்கு மக்களை ஈர்க்கச் செய்ய வேண்டும். அப்போது நாம் இவ்வாறான பிரச்சினைகளை ஓரளவாவது குறைத்துக் கொள்ளலாம்' என்கிறார் அவர்.
காஞ்சனா சிறிவர்தன
No comments:
Post a Comment