மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள ஜயங்கேணி பிரதேசத்தில் கைக்குண்டு, வாள்கள் உட்பட ஹெரோயினுடன் போதைப் பொருளுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எல்லாளன் படைப் பிரிவைச் சேர்ந்த மௌலி என்று அழைக்கப்படும் 26 வயதுடைய ஒருவரை நேற்று (31) 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான சனிக்கிழமை (30) குறித்த நபர் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டு கைது செய்ததுடன் அவரிடம் ஒரு கைக்குண்டு, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 10, வாள்கள் 3, 70 மில்லிக் கிராம் ஹெரோயின் என்பனவற்றை கைப்பற்றினர்.
இதில் கைது செய்யப்பட்டவர் விபுலானந்தா வீதி ஜயங்கேணியைச் சேர்ந்த 26 வயதுடைய மோகனதாஸ் ஜெகாந்தன் எனவும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் எல்லாளன் படைப் பிரிவு என பொதுமக்களிடம் தெரிவித்து அச்சுறுத்தி வந்த மௌலி என அழைக்கப்படும் இவரை பொலிஸார் பிடிக்கச் செல்லும் நிலையில் அவர் பொலிஸாரிடம் இருந்து தப்பி காட்டூனில் வரும் மௌலி போன்று மரங்களில் தாவி தப்பியோடி வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச் சம்பவத்தில் கைது செய்தவரை நேற்று மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நிருபர் சரவணன்
No comments:
Post a Comment