இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வெப்பநிலை, ஈரப்பதனைக் கட்டுப்படுத்தும் வசதிகளுடன் தம்புள்ளையில் களஞ்சியத் தொகுதி - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வெப்பநிலை, ஈரப்பதனைக் கட்டுப்படுத்தும் வசதிகளுடன் தம்புள்ளையில் களஞ்சியத் தொகுதி

விளைச்சல் அதிகமாகவுள்ள காலப்பகுதியில் விவசாயிகளின் மேலதிகமான மரக்கறிகள் மற்றும் பழங்களை வெப்பநிலை மற்றும் ஈரப்பதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சேமித்துவைப்பதற்கான களஞ்சியத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக 5000 மெட்றிக் தொன் கொள்ளளவைக் கொண்ட களஞ்சியத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந்தியாவின் ஒத்துழைப்புடன் தம்புள்ள பொருளாதார நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணியில் இக்களஞ்சியத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் இலங்கைக்கா இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றினர். 

இந்த விவசாய குளிரூட்டப்பட்ட களஞ்சியத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் 06 மாதங்களினுள் நிறைவு செய்யப்படவுள்ளது. பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் எண்ணக்கருவினால் உருவாக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கு “பிரபாஸ்வர” (உதயம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விவசாய வாழ்க்கையில் திருப்பு முனை என்பதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. 

தம்புள்ளவில் நிர்மாணிக்கப்படும் இக்குளிரூட்டப்பட்ட அறைகள் தொகுதிகள் பல்வேறான வெப்பநிலை மற்றும் ஈரப்பத மட்டங்களினைக் கொண்ட ஆறு பிரிவுகளுடன் நிர்மாணிக்கப்படும் என்பதுடன், விளைச்சல் அதிகமாகவுள்ள காலப்பகுதிக்கு மிகவும் சலுகையான விலைக்கு இக்குளிரூட்டப்பட்ட அறைகளில் தமது விளைச்சல்களை களஞ்சியப்படுத்தும் வாய்ப்பு பிரதேசத்தின் விவசாயிகளுக்கு இதனூடாக உரித்தாக்கப்படும். 

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கலாநிதி ஹர்ச.டி.சில்வா, “இந்நாட்டின் விவசாயிகள் விளைச்சல் அதிகமாகவுள்ள காலப்பகுதியில் மேலதிகமான விளைச்சல்களை யானைகள் உண்ணுவதற்கு வீசுகின்றனர். இப்பிரச்சினைக்கு விடையளிப்பதற்கு நீண்டகாலம் எடுத்துள்ளது. 2002ஆம் ஆண்டிலிருந்து இது தொடர்பில் நான் அறிந்துள்ளேன். 
நான் அக்காலப் பகுதியில் விவசாயிகளுக்கு சரியான நேரத்திற்கு சந்தைப்படுத்தல் தகவல்களை வழங்குவதற்கு தம்புள்ள பொருளாதார நிலையத்துடன் ஒன்றிணைந்து வேளாண்மை என்ற நிகழ்ச்சித் திட்டமொன்றினைச் செய்துள்ளேன். எனக்கு அன்றிருந்த அவாவினை இன்று நிறைவேற்றுவதற்கு வாய்ப்புக் கிட்டியமையினை இட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார். 

குளிரூட்டப்பட்ட அறைகள் வசதிகள் தொடர்பில் முதலீடு செய்கின்ற முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதுடன், தம்புள்ளவில் நிர்மாணிக்கப்படும் இந்த குளிரூட்டப்பட்ட அறைகள் தொகுதியினைச் சுற்றி மரக்கறிகள் மற்றும் பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகளினைக் கொண்ட சூழலொன்றினை கட்டியெழுப்புவதற்கு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பினை வழங்குவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக இந்நிகழ்ச்சித்திட்டம் அமுலாக்கப்படுவதுடன், உணவு ஆணையாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி இந்நிகழ்ச்சித் திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்குறிப்பிட்ட பணிப்பொறுப்பினை முன்னெடுத்துள்ளார். 

விவசாயிகளின் மேலதிகமான விளைச்சல்களை குளிரூட்டப்பட்ட அறைகளில் களஞ்சியப்படுத்தி தேவையான நேரத்திற்கு உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு முன்வைக்கும் புதிய திருப்பு முனையின் முதலாவது நடவடிக்கையாக இதனைக் குறிப்பிட முடியும் என்பதுடன், இக்கருத்திட்டத்தின் பின்னர் மத்திய மாகாணத்தினை உள்ளடக்கி கெப்பற்றிப்பொலவிலும், வட மாகாணத்தினை உள்ளடக்கி யாழ்ப்பாணத்திலும், தென் மாகாணத்தினை உள்ளடக்கி அம்பிலிபிட்டியவிலும் இவ்வாறான விவசாயக் களஞ்சியசாலைகளின் தொகுதியினை நிர்மாணிப்பதற்கு “பிரபாஸ்வர” (உதயம்) நிகழ்ச்சித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment