பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று (02) அதிகாலை 4.55 மணியளவில் UL-226 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
கொழும்பு 12, மீரானிய வீதியை சேர்ந்த 48 வயதுடைய மொஹமட் சித்தீக் மொஹமட் சியாம் என்பவரும் கபுகொட, கம்புறுபிட்டிய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய வீரசிங்க லங்கா ரஞ்சித் பெரேரா என்பவருமே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து இருவரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
துபாயிலிருந்து நாடுகடத்தப்படும் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோரை பாதுகாப்புப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு விசேட குழுவொன்று அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் குழுவில் அரச புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் 25 அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழு 24 மணித்தியாலங்களும் விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஷீட் மொஹம்மட் இம்ரான் உள்ளிட்ட நால்வர் கடந்த 29 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதுடன் அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment