முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை, மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களம் அழைப்பாணை விடுத்துள்ளது.
அதன்படி அவரை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அட்மிரல் கரன்னகொடவிடம், இதுவரை மூன்று தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் நான்காவது தடவையாக அவரை எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாகும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த வாரம் அட்மிரல் வசந்த கரன்னகொடவிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வா எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி விசாரணைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளாரென கூறப்படுகிறது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் தலைமறைவாகியிருந்தார்.
மேலும் தன்னை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும் உச்ச நீதிமன்றம், அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணையும் அனுப்பியிருந்தது. அதற்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment