தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது - பலதரப்பட்ட விடயங்கள் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது - பலதரப்பட்ட விடயங்கள் ஆராய்வு

எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த துரதிஷ்டவசமான தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தி வர்த்தகத்துறை உள்ளிட்ட பொருளாதாரத் துறையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித தீர்மானங்கள் தொடர்பில் கண்டறிய தேசிய பொருளாதார சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.

இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக வர்த்தகத் துறையினருக்கு அரசாங்கத்தினால் வழங்க வேண்டிய உதவிகள், அரச மற்றும் தனியார் துறையினர் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் எமது நாட்டைப் பற்றிய நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்தல், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நிர்மாணத்துறை, ஆடை உற்பத்தி, ஏற்றுமதி வர்த்தக சங்கம், வர்த்தக சபை, முதலீட்டு சபை, ஏற்றுமதி மேம்பாட்டு சபை, அரச வங்கிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

எதிர்பாராத இந்த தாக்குதல்களினால் தாம் முகங்கொடுக்க நேர்ந்துள்ள நெருக்கடிகள் தொடர்பாக வர்த்தக சங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, உற்பத்தியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றிற்கான துரித தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான விசேட செயற்திட்டமொன்று உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

இதற்காக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கண்டறிவதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு மேலும் விரிவுபடுத்தப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கமைய உரிய வர்த்தக துறையினருக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் இக்குழுவினால் ஆராயப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, இந்த எதிர்பாராத தாக்குதலினால் சாதாரண பொதுமக்கள் மத்தியில் ஓரளவு பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளிட்ட வர்த்தக துறையினரிடையே நம்பிக்கையின்மை ஏற்படவில்லை எனவும் அரசாங்கத்தின் மீது பூரண நம்பிக்கை வைத்து பின்னடைவுகளின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இன்று இடம்பெற்ற தேசிய பொருளாதார சபையில் தெளிவுபடுத்தப்பட்டது. 

மேலும், தற்போது குறிப்பிடத்தக்க அளவில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையாது காணப்படுவதோடு, அதாவது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படவில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டினர்.

தேசிய பாதுகாப்பினை உறுதி செய்து நாட்டின் சகல செயற்பாடுகளையும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் இதன்போது வர்த்தக துறையினரின் பாராட்டை பெற்றதோடு எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை ஒருபோதும் பலவீனமடைவதற்கு இடமளிக்காது அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ஜோன் அமரதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, ரவி கருணாநாயக்க, இரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன், மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment