அரசியல் உதைபந்தாட்டத்தை விடுத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 2, 2019

அரசியல் உதைபந்தாட்டத்தை விடுத்து தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவிப்பு

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை இனியும் தாமதிக்கக் கூடாது என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தேசிய பிரச்சினையில் அரசியல் உதைபந்தாட்டம் விளையாடுவதை அரசியல் கட்சிகள் நிறுத்தி, தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அதிகாரப் பகிர்விற்கு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு என்பன மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும் தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இந்த பிரச்சினையைத் தீர்க்க இருக்கும் வாய்ப்பை சகல தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நாம் நாட்டில் எத்தகைய திருத்தங்கள், முதலீடுகள், மாற்றங்கள் செய்தாலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் அவை எதுவும் பயனளிக்காது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் இனங்களிக்கிடையிலான மனக்கசப்பு தீர்க்கப்படவில்லை.

அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இனவாதத்தை தூண்டுகிறார்களே தவிர உண்மையான பிரச்சினைக்கு தீர்வு காண காத்திரமான எதுவும் செய்யவில்லை. பிரச்சினைகளை மக்களின் பக்கமாக இருந்து நோக்க அவர்கள் தவறிவிட்டார்கள்.

ஐ.,ம.சுமுவின் ஒத்துழைப்பு காரணமாகவே 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்பதை ஐ.தே.க மறந்து விட்டது. 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் உடன்பாட்டின் கீழே 19 ஆவது திருத்தத்தை ஆதரித்தோம். ஆனால் எமக்கு வழங்கிய உத்தரவாதத்தை ஜனாதிபதியும் நிறைவேற்றவில்லை.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை இனியும் தாமதிக்கக் கூடாது. இதற்காக வழிநடத்தில் குழுவொன்று நியமிக்கப்பட்டதோடு சம்பந்தனும் ஏனைய கட்சித் தலைவர்களும் நெகிழ்வுப் போக்குடன் செயற்பட்டார்கள். ஆனால் சுமந்திரன் எம்.பியும் ஜெயம்பதி விக்ரமரத்ன எம்.பியும் தான் இதனை குழப்பினார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறையை நிறைவேற்று பிரதமராக மாற்றும் ஒப்பந்தம் ஒன்றை இவர்கள் முன்னெடுத்ததால் பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்பு நழுவியது.

தேசிய பிரச்சினையுடன் அரசியல் உதைப்பந்தாட்டம் விளையாடுவதை அரசியல்கட்சிகள் நிறுத்த வேண்டும்.தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அதிகாரப்பகிர்விற்கு முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஷ்வரன் பிரசாத்

No comments:

Post a Comment