ஜனாதிபதி முன்னெடுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐநா பூரண ஒத்துழைப்பு - ஐ.நா சபையின் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட குழு விரைவில் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 30, 2019

ஜனாதிபதி முன்னெடுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐநா பூரண ஒத்துழைப்பு - ஐ.நா சபையின் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட குழு விரைவில் இலங்கை வருகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக துரித நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தை வழங்கி வருவதன் ஊடாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலகத்தினருக்கு சிறந்த முன்னுதாரணமாக செயற்படுகின்றார் என ஐ.நா சபையின் பிரதி பொதுச் செயலாளர் Minguel Angle Morations தெரிவித்தார்.

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஐநா சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியை சந்தித்தபோது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னெடுத்துவரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ ஹுட்டேரஸ் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.

ஸ்பெயின் நாட்டின் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் முன்னாள் தலைவருமான அவர், ஐ.நா பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர், இலங்கை ஜனாதிபதியினால் தற்போது முன்னெடுக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இன்று முழு உலகத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

அத்தோடு இந்நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரதிநிதிகள் குழுவொன்றினை வெகுவிரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐ.நா பொதுச் செயலாளர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது நாடான ஸ்பெயின் நாட்டில் 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அல்கைதா தாக்குதலை இதன்போது நினைவு கூர்ந்த பிரதிப் பொதுச் செயலாளர், ஸ்பெயின் நாட்டைப் போன்றே இலங்கையும் நட்புறவான பல சமூகங்களைக் கொண்ட சிறந்த விருந்தோம்பல் நாடாகும் எனவும் அவ்வாறான நாடுகள் தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகுதல் துரதிஷ்டவசமானவை எனவும் தெரிவித்தார்.

ஐ.நா நாகரீகங்களுக்கான கூட்டமைப்பினால் தற்போது மத வணக்கஸ்தலங்களின் பாதுகாப்பு பற்றிய அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதிப் பொதுச் செயலாளர், அதற்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ ஹுட்டேரஸ் மற்றும் பிரதிப் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த துயரமான சந்தர்ப்பத்தில் ஐ.நா சபையின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்திருப்பது பெரும் பலமாகும் எனத் தெரிவித்தார்.

தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள பயங்கரவாத சவால்களை வெற்றி கொள்வதற்கான ஆற்றல் இலங்கை பாதுகாப்பு துறையினரிடம் காணப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக கிடைக்கப் பெறும் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி மிக முக்கியமானவை என தெரிவித்தார். 

மேலும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு இராணுவத்தினரை நாட்டிற்குள் கொண்டு வர தாம் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஐ.நா சபையின் இலங்கைக்கான நிரந்த பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியதுங்க உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment