சர்வதேச தர பெறுபேறுகளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட கொட்டாவ – மாகும்புற பன்முக போக்குவரத்து நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் - News View

About Us

About Us

Breaking

Monday, April 1, 2019

சர்வதேச தர பெறுபேறுகளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட கொட்டாவ – மாகும்புற பன்முக போக்குவரத்து நிலையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்

புதிய தொழிநுட்பத்துடன் பொதுமக்களுக்கான போக்குவரத்து சேவையை வலுவூட்டுவது தொடர்பில் எமது நாடு மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இலகு தொழிநுட்ப போக்குவரத்து துறைக்கு வழிவகுக்கும் முகமாக சர்வதேச தர பெறுபேறுகளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட கொட்டாவ – மாகும்புற பன்முக போக்குவரத்து நிலையத்தை நேற்று (31) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்பட்ட இந்த போக்குவரத்து நிலையத்தினூடாக மக்களுக்கு பேருந்து, புகையிரத, வாடகை வண்டிகள் உள்ளிட்ட போக்குவரத்து தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யக்கூடியதாக அமையும்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்பை நோக்கிவருகின்ற வாகனங்கள் இந்த நிலையத்தில் நிறுத்தப்பட்டு புகையிரதம் அல்லது பேருந்துகளினூடாக தங்களது போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எல்.ஈ.டி பெயர்ப் பலகைகளினூடாக தொடர்ச்சியாக மக்களை தெளிவுபடுத்தல், ஜீ.பி.எஸ் தொழிநுட்பத்தினூடாக புகையிரம் அல்லது பேருந்து இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான வாய்ப்புகள், இணையத்தளத்தினூடாக பிரயாணச் சீட்டு முன்பதிவுகள், புகையிரதத்திலும் பேருந்திலும் ஒரே பிரயாணச் சீட்டை பயன்படுத்தி பிரயாணிக்கக்கூடிய வாய்ப்புகள், தனாகவே பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள், ஓய்விடம், சுகாதார வசதிகள், வங்கி வசதிகள், உணவகங்கள், பற்றுச் சீட்டுகளுக்கான கட்டணம் செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இந்த பன்முக போக்குவரத்து நிலையத்தினூடாக பூர்த்தி செய்துகொள்ள முடியும். 

முறையான பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகள் இங்கு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், நிலையத்தின் ஒட்டுமொத்த மின்சக்தி தேவைகளையும் சூரியசக்தியினூடாக பூர்த்தி செய்துகொள்வதும் சிறப்பம்சமாகும்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து பன்முக போக்குவரத்து நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விழாவில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த நிலையமானது பொதுப்போக்குவரத்து சேவையை வலுவூட்டுவதற்காக முன்னெடுக்கப்பட்ட முக்கிய அத்தியாயமாகும் என்றும் தெரிவித்தார்.

கல்யாண சாமக்றீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர், பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment