நீதிமன்றங்களில் நிலவும் சகல குறைபாடுகளுக்கும் நிவர்த்தி காணும் வகையில் 40 நீதிமன்றங்களைக் கொண்ட நீதிமன்ற கட்டிட வளாகம் ஒன்றை நிர்மாணிக்கப்போவதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கான நிதி தொடர்பில் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கம் காணப்பட்டுள்ளதுடன் விரைவில் மேற்படி நீதிமன்ற வளாகத்திற்கான அடிக்கல் நாட்டப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சிறைச்சாலைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகளை ஏற்றுக் கொள்வதாகவும் அவை நிவர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 8,000ம் கைதிகளே தடுத்து வைக்க முடியும் எனவும் 23,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி. அநுர பிரியதர்ஷன யாப்பா, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மீதான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது நீதித்துறையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் 800 கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலையொன்றில் 1900 சிறைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பல நீதிமன்றங்கள் அடிப்படை வசதிகளைக் கூட கொண்டிருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நீதிமன்றக் கடடிடமொன்றின் கூரை உடைந்து விழுந்ததாகக் குறிப்பிட்ட அவர், விஜயதாச ராஜபக்ஷ நீதியமைச்சராக பதவி வகித்தபோது பி.சி.சி. நிறுவனத்துக்குச் சொந்தமான காணியைப்பெற்று நீதிமன்றங்களை அமைக்கப் போவதாகத் தீர்மானித்திருந்தார். அது தொடர்பில் எதுவும் செயற்பாடுகளில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த போதே நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment