விசர் நாய்க் கடியால் அதிகரிக்கும் மரண எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் இதனை முற்றாக ஒழிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
27/2 நிலையியற் கட்டளையின் கீழ் விசர் நாய்க் கடிக்கான தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேள்வியொன்றை எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை தெரிவித்தார்.
அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது விசர் நாய்க் கடி நோயை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்தை மீண்டும் சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவுமுள்ள சுகாதார அதிகாரிகளின் அலுவலகங்களினூடாக அதனை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இதற்கு தேவையான வசதிகள் மற்றும் மனித வளங்கள் சுகாதார அமைச்சில் இருப்பதால் மீண்டும் அதனை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசர் நாய்க் கடி என்பது 100 வீதம் சுகப்படுத்த முடியாத ஆபத்தான நோயாகும். இது நாய் கடிப்பதாலே ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டுமானால் நாய்களுக்கு வருடாந்தம் ஊசிகளை ஏற்றுவதுடன் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
ஆனால் கால் நடைகள் திணைக்களம் சுகாதார அமைச்சினால் செயற்படுத்தப்படும் ஊசிகளை நாய்களுக்கு போடுதல், கட்டாக்காலி நாய்கள் காணப்படும் இடங்களில் விசர் நாய்க் கடி நோயை கட்டுப்படுத்தும் வகையில் விசேட திட்டங்களை முன்னெடுப்பதில்லை. அத்துடன் இது தொடர்பான தகவல்களையும் அந்த திணைக்களத்தினால் வழங்க முடியாதுள்ளது.
இதனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டில் 23 பேரும், 2018 இல் 25 பேரும் விசர் நாய்க் கடியால் உயிரிழந்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் 2018 ஆம் ஆண்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 3 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை விசர் நாய்க் கடி நோய் தொடர்பாக நாய்களின் தலைகள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டில் 854 நாய்களின் தலைகளும், 2017 இல் 738 நாய்களின் தலைகளும், 2018 இல் 638 நாய்களின் தலைகளும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி விசர் நாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாய்களின் எண்ணிக்கை 2016 இல் 55.27 என்ற வீதமாகவும் 2017 இல் 55.01 வீதமாகவும் 2018 இல் 57.26 வீதமாகவும் காணப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் 2014ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அவை 60 வீதமாகவே இருந்தன. அது பின்னர் 55 வீதம் வரை குறைவடைந்து தற்போது மீண்டும் அதிகரித்து செல்கின்றது. இதன்படி விசர் நாய்க் கடி நோய் அதிகரித்தே செல்கின்றது.
நாய்களுக்கு ஊசிகள் போடாத காரணத்தினாலேயே அந்த நோய் ஏற்படுகின்றன. நாய்கள் கடித்த பின்னர் அந்த நாய்க்கு ஊசிகள் ஏற்றபட்டுள்ளதா என ஆராய்ந்து அதற்கு ஏற்றால் போன்றே கடிபட்டவருக்கு ஊசிகள் ஏற்றப்படும். இவ்வாறாக ஏற்றப்படும் ஊசிகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 24200 இலிருந்து 2018 ஆம் ஆண்டில் 26000 வரை அதிகரித்துள்ளன.
உலக சுகாதார தாபனத்தினால் 2025 ஆம் ஆண்டளவில் விசர் நாய்க் கடி நோயை இலங்கையிலிருந்து ஒழிக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் விசர் நாய்க் கடி நோய் கட்டுப்பாட்டுக்காக 600 மில்லியன் ரூபா வருடாந்தம் ஒதுக்கப்படுகின்றது. அதன்படி அந்த நோயை கட்டுப்படுத்தும் பொறுப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டும். என்றார்
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
No comments:
Post a Comment