கொட்டாவ மாகும்பல பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை திறந்து வைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜப்பான் சர்வதேச புரிந்துணர்வு நிறுவனத்தினதும், இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு இந்த மத்திய நிலையத்தை அமைத்துள்ளது. இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
மத்திய நிலையத்திற்கு அருகாமையில் ரயில் நிலையமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதியும் கிட்டியுள்ளது.
தற்போது மஹரகமவில் ஆரம்பமாகவிருக்கும் காலி மற்றும் மாத்தறை வரையிலான அதிவேக வீதியின் ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிக்கும். இதற்கு மேலதிகமாக பொலன்னறுவை, அனுராதபுரம், பதுளை முதலான தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் இந்த மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
தொழில்நுட்ப தொடர்பாடல் வசதி, சிற்றுண்டிச்சாலை, வங்கி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் மத்;திய நிலையம் கொண்டுள்ளது. தனியார் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு, பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் வாய்ப்பும் இங்கு உண்டு. இயற்கை கழிவறை சுகாதார வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.
களனிவெளி ரயில் பாதையில் மாகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்துடன் ஒன்றிணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாகும்புர ரயில் நிலையம் ஜனாதிபதி தலைமையில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment