ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாதென்பதை வலியுறுத்தி தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றினைத் தயாரிக்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அனைத்து தமிழ்க் கட்சிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக என்.சிறீகாந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கடந்தவாரம் சந்தித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பாக முன்னாள் வட மாகாண சபைத் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது கைகூடவில்லை என அவர் தெரிவித்தார்.
குறித்த மகஜரைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில், ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா, அக்கட்சியின் தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த மகஜர் எதிர்வரும் 6ஆம் அல்லது 7ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிற்கு அனுப்புவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment