அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமல்ல என, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கட்சி, இன, மத, கொள்கை வேறுபாடின்றி அனைவரும் இணைந்து நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எமது எண்ணக்கரு.
அதற்கமைய அனைவரது ஆலோசனைகளையும் உள்ளடக்கிய ஆட்சி முறையை நிறுவ வேண்டும். கட்சியின் விருப்பிற்கமைய அன்றி, நாட்டிற்குரிய விதத்திலான தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அக்கொள்கை நீடித்திருக்கும்.
தனி அரசாங்கமொன்றில் அங்கம் வகிக்கக்கூடிய அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது எமது நோக்கமல்ல. அனைவரது ஆலோசனைகளையும் ஒன்றிணைத்த ஆட்சி முறையை நிறுவுவதே எமது தேவையாக உள்ளது.
அனைவருக்கும் ஜனநாயக ரீதியில் ஆலோசனைகளை முன்வைப்பதற்கான சுதந்திரத்தை எமது அரசாங்கம் அனைவருக்கும் வழங்கியுள்ளது. அதன்படி இந்த ஆலோசனைகளில் சிறந்ததை, நிறைவேற்றக்கூடியதை நிறைவேற்றுவோம்.
எனவே, ஒன்றிணைந்து சிறந்த நாடொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment