தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு எங்களுடைய பங்களிப்பும் இருக்கும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு எங்களுடைய பங்களிப்பும் இருக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணியை உருவாக்குவதற்கு எங்களுடைய பங்களிப்பும் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் கொள்ளத் தேவையில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ச.அரவிந்தன் தெரிவித்தார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரவிந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடிப்படை கொள்கையில் இருந்து விலகிச் சென்று விட்டார்கள். திரும்பி அவர்கள் மக்களுடைய பிரச்சினைகள், நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டு செயற்படுவார்கள் என்ற எண்ணம் எங்களிடம் இல்லை. 

கூட்டமைப்பினருடன் சேர்ந்து செயற்படக் கூடிய எண்ணம் எங்களிடம் இல்லை. மோசடி செய்யக் கூடிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகவும் மனவருத்தத்துக்குரிய விடயமாகும். 

இந்த நிலையில் அரசியல் குழப்ப நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்ற நிலையில் சரியான வழியில் அவர்களை கொண்டு செல்கிற பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. 

இன்று உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகள் கூட அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்யத் தவறியுள்ளனர். மோசமான ஒரு அரசியல் சூழ்நிலையில் மக்களை கொண்டு விட்டிருக்கிறது. 

யுத்த சூழ்நிலையில் இருந்த மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைக்கு இருந்தது அந்த பொறுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகி நிற்கிறது. அவர்கள் தங்களுடைய பதவிகளை தக்க வைப்பது எவ்வாறு என்ற எண்ணங்களுடன் செயற்படுவது மனவருத்தமாக இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment