சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் மூலம் அமைக்கப்படும் சகல கட்டடத் தொகுதிகளும் பசுமையான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் டி.எம்.மாலணி தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாண சபையின் ஏற்பாட்டில் மாகாணத்தில் உள்ள அரச அதிகாரிகளுக்கு காலநிலை சம்பந்தமாக தெளிவுபடுத்தும் நிகழ்வு அண்மையில் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள சமூதி மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கை நாட்டுக்கு வருடத்தில் 365 நாட்களும் சூரிய ஒளி நன்றாக கிடைக்கின்றது. அத்தோடு நம்மை சுற்றி கிடைக்கும் காற்றும் சுத்தமாக கிடைக்கின்றது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை பயன்படுத்திக் கொள்வதில்லை.
குறிப்பாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் காற்று, வெளிச்சம் வராமல் கதவுகள், ஜன்னல்கள் முற்றாக மூடப்பட்டு திரைகள் மூலம் மறைக்கப்பட்டு மின்சாரத்தின் மூலமாக வெளிச்சம், காற்றை பாவனைக்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
சுத்தமான காற்றையும் வெளிச்சத்தையும் பெற்றுக் கொள்வது நாம் அனைவருக்கும் சிறந்ததாகும். எனவே சப்ரகமுவ மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் அமைக்கப்படும் சகல அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் அனைத்தும் பசுமையானவையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறையை தனியார் நிறுவனங்களும் கையாள வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment