குறைந்த வருமானம் கொண்டோருக்கு இலவச சட்ட உதவி - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

குறைந்த வருமானம் கொண்டோருக்கு இலவச சட்ட உதவி

பொதுமக்கள் தங்களது பிணக்குகளையும் பிரச்சினைகளையும் நியாயமான முறையில் தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றங்களையும் பலதரப்பட்ட நியாய சபைகளையும் நாடுகின்றனர். இதில் நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் தீர்த்துக் கொள்ளக்கூடிய பிணக்குகளுக்கும் நீதிமன்றங்களை மக்கள் நாடுவதால் அவர்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் வீண்விரயம் செய்வது மட்டுமல்லாமல் நீதிமன்றங்களின் நேரத்தையும் வீண்விரயம் செய்கின்றனர்.

நேரம் என்பது பெறுமதியானதொன்றாக இருந்தாலும் அவர்கள் அது வீண் விரயமாவதில் கவலை கொள்வதில்லை. ஆனால் பணம் விரயமாகும்போதுதான் அது பற்றி கவலைப்படுகின்றனர். எனவே இது இரண்டையும் பாதுகாக்கும் பொருட்டு, சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அவர்களை இவ்வாறான வீண்விரயங்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு சட்ட உதவி ஆணைக்குழு முடியுமானளவு தமது சட்ட ஆலோசனைகளை பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருகின்றது. என்று சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பதிகாரியும் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி எம்.ரி. சபீர் அகமட் தெரிவித்தார்.

சட்ட உதவி ஆணைக்குழு, கல்முனைப் பிராந்தியத்தில் தனது சேவையை 2005 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தது. ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை பல விழிப்பூட்டல் கருத்தரங்குகளை பொது மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் மற்றும் பெண்கள் முதியோர்களுக்கும் செய்து வருவதோடு வருமானம் குறைந்தவர்கள் சார்பாக அவர்களது வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாகவும் சட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றது.

சட்ட உதவி ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய காரியாலயமானது கல்முனை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ளதோடு பொது மக்கள் யாவரும் சட்ட உதவி ஆணைக்குழுவின் சேவைகளை வார நாட்களில் காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை பெற்றுக்கொள்ள முடியும்.

பொது மக்கள் எவ்வாறு சட்ட உதவி ஆணைக்கழுவின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பாக அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் தெரிவித்த மேலும் சில விடயங்கள் இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன. இதன்போது நாம் அவரிடம் கல்முனை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் தொடர்பாக வினவியபோது

கல்முனை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் நீதவான் நீதிமன்றம் (Magistrate Court), மாவட்ட நீதிமன்றம் (District Court), மேல் நீதிமன்றம் (High Court), சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் (Civil Appellate Court) என்பவற்றேடு காழிகள் சபையும் (Board of Quazi) காணப்படுகின்றன. இந்தக் காழிகள் சபை மாதம் ஒரு தடவை என்ற அடிப்படையில் சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறுகின்றது.

நீதவான் நீதிமன்றம் அநேகமாக குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்குவதுடன் பராமரிப்பு தொடர்பான வழக்குகளையும் விசாரணை செய்கின்றது.

அதேபோன்று மாவட்ட நீதிமன்றம் காணிகள் தொடர்பான பிணக்குகள், பிரிவிடல் வழக்குகள், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிணக்குகள், ஒப்பந்தங்கள் தொடர்பான பிணக்குகள், முஸ்லிம் அல்லாதவர்கள் தொடர்பில் விவாகரத்து வழக்குகள், மற்றும் சிவில் நடவடிக்கைகள் பொடர்பான சகல பிணக்குகளையும் விசாரித்து தீர்ப்பு வழங்குகின்றது.

மேல் நீதிமன்றமானது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மற்றும் சமூக விரோத செய்றபாடுகள் எனக்கருதப்படும் பாரியளவிலான போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுதப் பரிகரணம் தொடர்பான வழக்குகள் போன்றவற்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையோடு விசாரணை செய்து தீர்ப்பு வழங்குகின்றது. அது மட்டுமல்லாது நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மீளாய்வு செய்கின்றது. 

இங்குள்ள மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மேன்முறையீடும் செய்ய முடியும். அது மட்டுமல்லாது காழி நீதிமன்றங்களின் தீர்ப்புகளை, இங்கு மாதமொருமுறை நடைபெறும் காழி சபைகளுக்கு (Board of Quazi) மேன்முறையீடு செய்யவும் முடியும்.
வழக்கு நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் :

பொதுவாக வழக்கு நடவடிக்கைகளின்போது, குறிப்பாக வருமானம் குறைந்தவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் அதிலும் குறிப்பாக பணப்பிரச்சினை மிகவும் முக்கியமானதொன்றாகக் காணப்படுகின்றது. இதனால் சட்ட உதவி ஆணைக்குழுவானது மாத வருமானம் 18,000/- விட குறைவானவர்களுக்கு வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் தமது சட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. 

ஆயினும் சட்ட உதவி ஆணைக்குழுவானது சகல வழக்குகளுக்கும் தமது உதவிகளை வழங்கமாட்டாது. அதாவது சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பான வழக்குகள், குற்றவியல் தொடர்பான வழக்குகளுக்கு சட்ட உதவி ஆணைக்குழு உதவி செய்ய முன்வரமாட்டாது.

சட்ட உதவி ஆணைக்குழு இலவசமாக தமது சேவைகளை வழங்குகின்றபோதும் ஒரு சில பொது மக்கள் அதில் ஈடுபாடு காட்டுவதில்லை. அத்தோடு ஒத்துழைப்பும் வழங்குவதில்லை. இலவசமாகக் கிடைப்பதால் அதன் பெறுமதி அவர்களுக்கு விளங்கிக்கொள்வதில்லை என்பதே அதற்கான காரணமாகும்.

இவ்வாறு சட்ட உதவிகளை அரசாங்கம் பல கோடி ரூபாய்களை செலவு செய்தே வழங்கிக் கொண்டிருக்கின்றது. நானும், எனக்கு உதவியாக பல சட்டத்தரணிகளும் இவ்வாறான வருமானமற்றவர்களுக்காக நீதி மன்னறங்களில் வாதாடுகின்றோம். இதில் நான் நிரந்தர ஊழியனாக கடமையாற்றுகின்றேன். ஏனைய சட்டத்தரணிகள் பகுதி நேர சட்டத்தரணிகளாகக் கடமையாற்றுகின்றனர். இவர்களுக்கு இவர்களின் சேவைக்கேற்ப அரசாங்கத்தால் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

எனவே யாரும் பணம் இல்லை என்ற ஒரு காரணத்துக்காக நீதியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனக்கூறமுடியாது.

சட்ட உதவி ஆணைக்குழு,
நீதிமன்றக் கட்டடம்,
கல்முனை.
தொலைபேசி இலக்கம்: 0672223710

தினகரன்

No comments:

Post a Comment