மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியினால் வைத்தியர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 28, 2019

மீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தொடர் முயற்சியினால் வைத்தியர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீராவோடை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் எச்.எம்.எம். முஸ்தபா மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக மீராவோடை வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் 2019.03.01ஆம்திகதி - வெள்ளிக்கிழமை தொடக்கம் தனது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார்.

வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் வேண்டுகோளையேற்று வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி. கே. நவரெட்ணராஜா ஆகியோருக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இவ்வைத்தியசாலையில் நெடுங்காலம் தொட்டு இன்றுவரை வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுவதுடன், இங்கு முழுநேர கடமையாற்றும் வைத்தியர்கள் நான்கு பேர் தேவைப்பாடாக உள்ள நிலையில் தற்போது இரு வைத்தியர்கள் மாத்திரமே பல சிரமங்களுக்கு மத்தியில் முழுநேர கடமையாற்றி வருகின்றனர். இவ்விருவரதும் கடமை நேரம் முடிந்ததன் பிற்பாடு வருகின்ற நோயாளர்கள் சில சந்தர்ப்பங்களில் திருப்பி அனுப்பப்படுகின்றபோது நோயாளிகளின் உறவினர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் பிணக்குகள் ஏற்படுகின்றன. இதனால் சிகிச்சைக்கு நோயாளிகள் வருவது குறைகின்றது. இது வைத்தியசாலையின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கின்றது.

இதுபோன்ற பல்வேறுபட்ட விடயங்களை சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பலமுறை சந்திப்புக்களின்போது சுட்டிக்காட்டினர்.

அத்துடன், தற்போதுள்ள இரு வைத்தியர்களும் இரவு பகல் பாராது பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களால் ஆன சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றமையும் இங்கு பாராட்டத்தக்கதாகும்.

அதன் தொடரில் அரசாங்க வைத்தியர் அதிகாரிகள் சங்கத்தினை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் சந்திப்பதற்கு ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சந்திப்பில், வைத்தியசாலையின் நிலவரங்களை சுட்டிக்காட்டி இம்முறை வழங்கப்படவுள்ள வைத்தியர்கள் நியமனத்தில் எமது வைத்தியசாலைக்கு இரு வைத்தியர்களை நியமிக்குமாறு கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தனர். அதன் பயனாக இன்று ஒரு வைத்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான சந்தர்ப்பத்தினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஏற்படுத்தி தந்திருந்தார்.

இனிவரும் காலங்களில் இவ்வைத்தியசாலையில் மூன்று வைத்தியர்கள் கடமையாற்றவுள்ளதுடன், எமது வைத்தியசாலையின் ஆளணி வெற்றிடத்திற்கேற்ப இன்னுமொரு வைத்தியரையும் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இவ்வைத்தியசாலையின் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறைகளில் கவனம் செலுத்தி வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் அனைத்திற்கும் இன்றுவரை உதவி புரிந்து வரும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினையும் பாராட்டுக்களையும் எமது பிரதேச மக்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment