கூட்டு ஒப்பந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் - அனைத்து தரப்புடனும் 5 ஆம் திகதி இறுதிப் பேச்சு - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

கூட்டு ஒப்பந்த வர்த்தமானி அறிவித்தல் இடைநிறுத்தம் - அனைத்து தரப்புடனும் 5 ஆம் திகதி இறுதிப் பேச்சு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையே செய்துகொண்ட கூட்டு உடன்படிக்கையை அரசாங்க வர்த்தமானியில் அறிவித்தல் விடுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைநிறுத்தம் செய்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதிய சம்பள உடன்படிக்கையை தற்காலிகமாக வர்த்தமானியில் வெளியிடுவதை நிறுத்தி வைப்பதற்கு தொழில் அமைச்சர் இணங்கியிருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர் நேற்று தெரிவித்தனர். இது தொடர்பாக தெரியவருவதாவது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக நேற்று (01) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், வீ.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அரசின் சார்பில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப் பேச்சவார்த்தையின் போது, இந்த கூட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் இவ் வொப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளதுடன் ஊக்குவிப்புக் கொடுப்பனவான 140 ரூபாய் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்தது.

இதனை நடைமுறைபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டிய ஒரு நிலை ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனை செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தொழில் அமைச்சருக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன் இது தொடர்பாக எதிர்வரும் 5 ஆம் திகதி அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டு இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறும் அமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார்.

இதன்படி எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் பின்பு தமிழ் முற்போக்கு கூட்டணி தனது நிலைப்பாடு தொடர்பாக இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் என்றும் கூட்டணி உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment