மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 48 பேருள் 18 பேருடைய பெயர் பட்டியல் சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல நேற்று தெரிவித்தார்.
இவர்கள் 18 பேர் தொடர்பான விவரங்களும் நன்கு ஆராயப்பட்டு அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு தகுதியுடையவர்கள்தானா என்பது நிரூபிக்கப்பட்டதன் பின்னரே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென்றும் அமைச்சர் கூறினார்.
வெலிமடயில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நீதிமன்றத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அமைச்சர் தலதா அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் மேற்படி பதிலளித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய 30 பேரும் மேன்முறையீடு செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் மேன்முறையீடு செய்யாத எஞ்சிய 18 பேருடைய பெயர் பட்டியலே சட்ட மாஅதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை மாகாண சபைத் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடக்கும் என்றும் இதற்காக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவது அநாவசியமானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நடைமுறையிலிருந்த தேர்தல் முறையை மாற்றியதன் காரணமாகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் காலதாமதம் ஆனது. அதே நிலை தான் தற்போது மாகாண சபைத் தேர்தலுக்கும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் கூறினார்.
No comments:
Post a Comment