இந்த வாரம் எமது “எதிரொலி” நேர்காணலில் செரன்டிப் சர்வதேச நிறுவனத்தின்நிறைவேற்றுப் பணிப்பாளரும் கல்குடாவின் ஆளுமைகளில் ஒருவருமான H.M.M.றியாழ் இலங்கையின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD க்கு வழங்கிய ஆங்கில மூல நேர்காணலை தமிழ் மூலம் இடம்பெறுகிறது.
கல்குடா மண் ஈன்றெடுத்த சாதனையாளர்களில் ஒருவரான H.M.M.றியாழ், பின்தங்கிய கிராமமான மீராவோடையில் பிறந்து, ஆரம்பக்கல்வியை மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்திலும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையின் முன்னணிப் பாடசாலையான கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் தரம் வரை கற்றார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, பட்டயக்கணக்காளராக (CHARTERED ACCOUNTANT) பட்டம் பெற்று துபாய், ஜேர்மன், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய அவர், தற்போது இலங்கையில் 4000 கோடி ரூபாய்களை முதலீடு செய்திருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) த் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி மா உற்பத்தி சர்வதேச நிறுவனமான செரன்டிப் மா நிறுவனத்தின் (SERENDIB FLOUR MILLS) பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) பதவி வகிக்கிறார்.
இவர் அண்மையில் வெளிவந்த இலங்கையின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD க்கு ஆங்கில மொழி மூல நேர்காணலொன்றை வழங்கி இருந்தார். அந்நேர்காணலை தமிழ் மூலம் வழங்குவதில் Thehotline,lk பெருமையடைகிறது,
நேர்காணலை நேர்த்தியான முறையில் தமிழாக்கம் செய்து தந்துதவிய அரச அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஓட்டமாவடி எம்,எம்,இப்றாஹீம் அவர்களுக்கு நன்றிகள்.
கேள்வி : செரன்திப் மாவு ஆலையின் தத்துவார்த்தம் என்ன?
பதில் : தேசத்தின் போசணைக்குப் பொறுப்பானதொரு தாபனம் என்ற வகையில், குடும்ப வாடிக்கையாளர்கள், பேக்கரிகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய கைத்தொழில் சார்ந்தோர் உட்பட எமது கொள்வனவாளர்களுக்கு போசாக்கான தரத்தில் உயர்ந்த கோதுமை மா உற்பத்திகளை நாம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டினால் உந்தப்பட்டுள்ளோம்.
இலங்கைச்சமுதாயத்தில் கோதுமை மா ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது என்பதை விளங்கிக்கொண்டு, எமது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நேர்த்தியான கோதுமை மா உற்பத்திகளை வழங்குவதற்கு நாம் நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துகின்றோம். முடிந்தளவு உயர் போசாக்கினை வழங்குவதற்கும், இலங்கையர்கள் அனைவரினதும் சீவனத்தரத்தினை உயர்த்துவதற்கும் நாம் பாடுபடுகின்றோம்.
கேள்வி : கம்பனி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை எத்தகைய முன்னேற்றங்களை அடைந்துள்ளது?
பதில் : இக்கம்பனி துபாயிலுள்ள எமிரேட்ஸ் ட்ரேடிங் ஏஜன்ஸிக்கும் அல்-குரேர் பூட்ஸ் நிறுவனத்துக்குமிடையில் 1999ம் ஆண்டு ஒரு கூட்டு முயற்சி (Joint Venture) ஆகப் பதிவு செய்யப்பட்டு, 2008ம் ஆண்டு வர்த்தகச் செயற்பாடுகளை ஆரம்பித்தது.
தரத்திலும் பக்குவத்திலும் எமது பயணம் வெற்றிப்பாதையில் சென்றுள்ளது. இன்று உள்ளூர் நுகர்வோர் உணவுத்துறையில் நம்பிக்கைக்குரிய முன்னணி விநியோகஸ்தராக மிளிர்கின்றோம். இவ்வருடம் 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதுடன். அதிநவீன இயந்திராதிகளில் முதலீடு செய்து உயர்ந்து செல்லும் கேள்விக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது உற்பத்திக் கொள்ளவை அதிகரித்துள்ளோம்.
கேள்வி : கம்பனி தனது தசாப்த காலப்பயணத்தில் அடைந்துள்ள மைல்கற்கள் என்னென்ன?
பதில் : செரன்திப் மாவு ஆலை தனது 10 வருட காலப்பயணத்தில் பல மைல்கற்களை அடைந்துள்ளது. முதலாவது, எமது உற்பத்தி வகையறாக்களின் பன்முகப்படுத்தலை அறிமுகப்படுத்தியது. இன்று, 7 நட்சத்திர வியாபாரக்குறியின் கீழ் 10 வகைகளை உற்பத்தி செய்கின்றோம். பேக்கரித்துறைக்கு பேக்கரி மாவு, ஆசிய உணவு வகைகளுக்கு வீட்டு மாவு, உணவகங்களுக்கு றோகி மா, நூடில்ஸ் மா, பிஸ்கட் மா, இந்திய விசேடங்களுக்கு சக்கி ஆட்டா மா மற்றும் சுகாதார நலன்களுக்கான நிறையுணவு மா.
மற்றுமொரு மைல்கல்லானது, 2012ல் சில்லறை விலைப்பக்கற்றுக்களை அறிமுகப்படுத்தியது. இது வீட்டுப்பாவனைக்கான மா விநியோகத்தராக செரன்திப் மா ஆலையின் அடையாளத்தை மாற்றியமைத்தது. வாடிக்கையாளரின் வாங்கும் பாங்குகளையும், சில்லறை விற்பனையாளரின் விற்கும் பாங்குகளையும் நாம் அடையாளம் காணத்தொடங்கிய போது, பாக்கற் செய்யப்படாத மாவை விட, வியாபார அடையாளத்தைக் கொண்ட மாவுக்கு சந்தையில் தேவைப்பாடு நிலவுவது தெரிய வந்தது.
செரன்திப் மா ஆலையின் புதுமை முனைப்பினூடாக, முதலிடம் வகிக்கும் பேக்கரித்துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப்பூர்த்தி செய்வதற்காக பேக்கரி மாவின் சூத்திரத்தையும் விருத்தி செய்தது. விநியோக நிலையங்களைத் தாபித்தல் விடயத்தில், ஒருகொடவத்த பிரதான பண்டகசாலைக்கு மேலதிகமாக, வாடிக்கையாளர்கள் தட்டுத்தடங்கலின்றி பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக குருணாகல, வவுனியா, கண்டி, அம்பலாங்கொட, கிருலப்பன போன்ற இடங்களிலும் பண்டகசாலைகள் பலவற்றை நிறுவியுள்ளோம்.
கேள்வி : ‘நாட்டைப்போசித்தல்” எனும் தனது நோக்கினை செரன்திப் மா ஆலை எவ்வாறு செயற்படுத்திக் காட்டுகின்றது?
பதில் : நாட்டைப் போசித்தல் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. நாடு பூராவுமுள்ள எமது வாடிக்கையாளர்கள் நிறைவும் போசாக்குமுள்ள எமது உற்பத்திகளினூடாக வளம் பெறுவதை நாம் நிச்சயப்படுத்துகின்றோம். மறுபக்கத்தில் உணவுப் பாதுகாப்பு எந்தவொரு நாட்டினதும் நல்வாழ்வுக்கு இன்றியமையாதவொரு காரணியாகும். இதனை அடையாளப்படுத்திக்கொண்டு, செரன்திப் மா ஆலை எமது சந்தைக்கு எப்போதும் ஆறு மாதங்களுக்கான கோதுமை மாவை கையிருப்பில் வழியில் மூலப்பொருளாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
கேள்வி : வாடிக்கையாளர்களின் மாற்றமடையும் தேவைகளுக்கு கம்பனி எவ்வழிகளில் ஈடுகொடுக்கின்றது?
பதில் : இலங்கையில் பாடசாலை செல்லும் பிள்ளைகளில் பலர் இரும்புச் சத்துக்குறைபாட்டினாலும், கர்ப்பவதிகள் பொலிக் அசிட் குறைபாட்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அடையாளம் கண்டுள்ளோம். இத்தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாம் இரும்புச்சத்து மற்றும் பொலிக் அசிட் கொண்டு வலுப்படுத்திய எமது மாவை சந்தைப்படுத்தியுள்ளோம். – நாட்டைப்போசிக்கும் எமது நோக்கினை எட்டும் எமது உன்னத பணிக்கு இம்முயற்சி மற்றுமொரு சான்றாகும்.
மேலும், வாடிக்கையாளர் உள்ளுணர்வுகள் எப்போதும் செரன்திப் மாவு ஆலையின் வாழ்வு முறையாக அமைந்து விடும். உதாரணமாக, தரமான சக்கி ஆட்டா மாவுக்கான தேவை நிலவுவதை நாம் சமீபத்தில் அடையாளம் கண்டோம். உயர்வான போசாக்குப் பெறுமதியைக் கொண்டுள்ள இம்மா சப்பாத்தி, பூரி போன்ற இந்திய, பாகிஸ்தானி உணவுகளில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றது. இம்மா எமது வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமாக இருப்பதால், சக்கி ஆட்டா மா உற்பத்திக்குத் தேவையான புதிய இயந்திரத்தில் முதலீடு செய்து சென்ற வருடம் இம்மாவினை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.
கேள்வி : உங்களின் வியாபாரச்சின்னம் சந்தையில் எந்நிலையினைப் பெற்றுள்ளது?
பதில் : இலங்கையின் பொருளாதாரம் அரிசியை அடிப்படையாகக் கொண்டது. நாம் கோதுமை மா வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின்ற போதிலும், இலங்கையர்கள் தமது முக்கிய உணவிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் எண்ணவில்லை.
எமது வியாபாரச்சின்னம் – 7 நட்சத்திரம் – அரிசி நுகர்வுக்குப்பதிலீடாகாது. மூன்று வேளை உணவுக்குப் போதியளவு அரிசி கிடைக்காத பற்றாக்குறை நிலையை ஈடுசெய்யும் பணியை மாத்திரமே நாம் ஆற்றுகின்றோம்.
7 நட்சத்திர வியாபாரச்சின்னமானது சுத்தம், தரம், புதுமை, புதுமணம், சேவை, நம்பிக்கை முதலியவற்றின் சின்னமுமாகும். மேலும், நாம் உற்பத்தி செய்யும் மாவு தரமான தொழில்நுட்பம், மூலப்பொருள், சூத்திரம், விநியோகம், தொழில்நுட்ப ஆதரவு முதலியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் எமது இறுதி உற்பத்தியானது, இத்துறை உற்பத்திகளில் நிகரற்றதாக விளங்குகின்றது.
கேள்வி : தங்களுடைய தொழிற்துறையிலும் செயற்பாடுகளிலும் தரம் எவ்வாறு பேணப்படுகின்றது?
பதில் : மூலப் பொருட்களிலிருந்தே தரம் பேணப்படுகின்றது. சிறந்த கோதுமை உற்பத்தி நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து நேர்த்தியான கோதுமையை இறக்குமதி செய்கின்றோம். உற்பத்தி என வரும் போது, செரன்திப் மா ஆலை முழுச்செயற்பாட்டுத்தர உறுதிப்பாட்டினையும் R&D திணைக்களத்தினையும் கொண்டிருக்கின்றது. இவற்றினூடாக உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் வாடிக்கையாளர் தேவைப்பாடுகளையும் கண்காணித்து புதுநுட்பங்களைப் புகுத்துகின்றோம்.
எமது நிறுவனம் தனது மூலதாரச் செயன்முறைகளை ஒருமுகப்படுத்தும் பொருட்டு ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவ முறைமையொன்றை அமுல்படுத்துவதுடன், தனது தரத்துக்குச் சான்றாக ISO 9001:2008, ISO 14001:2004, BS OHSAS 18001:2002 மற்றும் ISO 22000:2005 முதலிய சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. இலங்கையில் SLS சான்றுப்படுத்திய ஒரே கோதுமை மா வியாபாரச்சின்னமும் 7 நட்சத்திரமாகும்.
கேள்வி : செரன்திப் மா ஆலை உயர்தர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தெரிந்த விடயம். – இதனை விளக்கிக் கூறுவீர்களா?
பதில் : மாவரைத்தலானது, ஒரு பூரணமான செயன்முறை. இத்துறையில் சுவிட்சர்லாந்து மிகச்சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. எமது தரம் குறைந்து விடக்கூடாதென்பதற்காக மாவரைக்கும் இயந்திராதி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் Bühler Holding இயந்திரத்தில் நாம் முதலீடு செய்துள்ளோம்.
No comments:
Post a Comment