பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூடிய விரைவில் நியாயமான சம்பளத்துடன், உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் உறுதியளித்துள்ளார்.
பிரதமரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
சம்பள அதிகரிப்பு தொடர்பில் தற்போது சமூக வலைதளங்களில் முன்னுக்கு பின் முரனான பல்வேறு கருத்துக்களும், செய்திகளும் வெளியாகி வருகின்றது. அவை உண்மைக்கு புறம்பானவை. சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அறிவிக்கும் அறிவிப்பே உத்தியோகபூர்வமானது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க வெயிநாடு சென்றுள்ளார். ஒரிரு நாட்களில் அவர் நாடு திரும்பியவுடன், தொழிலமைச்சு ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு வெகு விரைவில் தீர்வு காணப்படும்.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என பிரதமர் ரனில் விக்கரமசிங்கவும் பணிப்புறை வழங்கியுள்ளார். இதற்கமையவே இந்த முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம். இந்த விடயம் தொடர்பில்¸ தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகேவுடன் நாளாந்தம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றேன்.
இம்முறை நியாயமான சம்பளத்துடன் நிலுவை பணத்தையும் பெற்றுக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கைசாத்திட தொழிற்சங்கங்கள் உறுதியாகவுள்ளனர்.
இதேவேளை நாம் இந்த விடயத்தில் முயற்சிகளை மேற்கொள்ளவில்லையென சிலர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் நாங்களும் அந்த பரம்பரையை சேர்ந்தவர்கள் எனவே இந்த பிரச்சனைக்கு கூடிய விரைவில் முடிவெடுப்போம்“ என கூறினார்.
No comments:
Post a Comment