திறைசேரி பிணைமுறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு செய்துள்ள பரிந்துரைக்கமைய முழுமையான கணக்காய்வை மேற்கொள்ளும் ஆரம்ப நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவின் பரிந்துரையை நடைமுறைப் படுத்துவதற்கு தாமதமேற்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கி ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்துரைத்துள்ள அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இணங்க கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முழுமையான கணக்காய்வை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இத்துறை தொடர்பில் சிறந்த அனுபவமுள்ள நிபுணர்கள், பாரபட்சமற்ற ரீதியில் செயற்படும் நிறுவனங்களின் தொழிற்சங்கவாதிகள் ஆகியோர் மேற்படி விசாரணைகளை மேற்கொள்ள முடியும். அத்தகையோரை தெரிவுசெய்யும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திறைசேரி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள விடயங்களை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய வங்கி ஆளுநர், நாம் அந்த கணக்காய்வைச் செய்வதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுப்போம். அதில் எந்த தாமதமும் இருக்காது. எமது தரப்பிலிருந்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் சகல வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
அதற்கேற்ற வகையில் சுயாதீன மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு விசேட செயற்பாடொன்று முன்னெடுக்கப்படும். அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இது கணக்காய்வாளர் நாயகத்தின் தரப்பினரின் கீழ் மேற்கொள்ளும் ஒரு ஆய்வாகும்.
No comments:
Post a Comment