காயமுற்ற மத்தியூஸுக்கு பதிலாக இலங்கை ஒருநாள் அணியில் சதீர சமரவிக்ரம - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

காயமுற்ற மத்தியூஸுக்கு பதிலாக இலங்கை ஒருநாள் அணியில் சதீர சமரவிக்ரம

உபாதைக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்தியூஸுக்கு பதிலாக, நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் நகரில் இடம்பெற்ற நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிக் கொண்டிருந்த மத்தியூஸ் தனது இடது தொடையில் உபாதை ஒன்றினை எதிர் கொண்டிருந்தார்.

அந்த உபாதை காரணமாக நான்காம் நாளின் தேநீர் இடைவேளையின் போது மைதானத்தினை விட்டு வெளியேறிய மத்தியூஸ் அதனை அடுத்து போட்டியின் ஐந்தாம் நாளிலும் இலங்கை அணிக்காக துடுப்பாட வந்திருக்கவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (30) மத்தியூஸ் தொடர்பான வைத்திய பரிசோதனை முடிவுகள் வெளியாகியிருந்தன.

குறித்த வைத்திய பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு மத்தியூஸினால் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் இந்த உபாதை அஞ்சலோ மத்தியூஸுக்கு ஜனவரி 3ஆம் திகதி ஆரம்பமாகும், நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் தொடர், அதனை அடுத்து இடம்பெறவுள்ள டி20 தொடர் என்பவற்றில் விளையாடும் வாய்ப்பினை இல்லாமல் செய்துள்ளது.

இதனால் சதீர சமரவிக்ரமவுக்கு நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இலங்கை அணிக்காக விளையாட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக இதுவரையில் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 23 வயதான சதீர சமரவிக்ரம, அண்மையில் கொழும்பில் இடம்பெற்று முடிந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியொன்றினை பெற அரைச்சதம் ஒன்றுடன் உதவியிருந்தார்.

அதேநேரம், சதீர சமரவிக்ரம அண்மையில் இடம்பெற்று முடிந்த உள்ளுர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் சிறப்பான பதிவுகளை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment