வவுனியாவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து இராணுவம் சுற்றிவளைப்பு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 2, 2019

வவுனியாவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து இராணுவம் சுற்றிவளைப்பு!

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது சந்தேக நபர் தப்பியோடிய நிலையில் அவரது பையில் இருந்து ஆயதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக புளியங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பதுங்கியிருந்துள்ளனர்.

இதன்போது நேற்று (01) இரவு 10 மணியளவில் அங்கு வந்த ஒருவரை மறித்து சோதனையிட முற்பட்ட போது குறித்த நபர் தான் கொண்டு வந்த பையை வீசிவிட்டு அப்பகுதியில் இருந்து காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பையில் இருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் அதன் கூடு உட்பட மேலும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் குறித்த நபரை தேடியறியும் முகமாகவும் மேலும் காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வகையிலும் புதூர் முதல் கனகராயன்குளம் வரையுமான காட்டுப்பகுதி மற்றும் கிராமங்களை உள்ளடக்கி இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியும் நாடப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருவதுடன் யுத்த நிறைவின் பின்னர் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டுள்ளமை பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் அப்பகுதி மக்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்துள்ளது.

கந்தன் குணா - வசந்தரூபன்

No comments:

Post a Comment