சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வழிநடத்தல் குழுவில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பொய்த் தகவல்களை வெளியிட்டு சிறுபான்மை சமூகத்தை ஏமாற்றும் முயற்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஐ.தே.கவும் த.தே.கூ வும் ஜே.வி.பியும் இணைந்து புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்ட அவர், பிரபாகரன் வெளியிட்ட பயங்கரவாத கருத்துகளை விட சுமந்திரனின் கருத்துகள் இன நல்லுறவுக்கு குந்தகமாக அமைவதாகவும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற சுதந்திர கட்சி ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் நானும் அங்கத்தவராக இருக்கிறேன்.
சுமந்திரன் கூறுவது போன்று புதிய அரசியலமைப்பு நகலொன்றை சுதந்திர தினத்திற்கு முன்னர் சமர்ப்பிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
ஐ.தே.கவுக்கும் த.தே.கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வழிநடத்தல் குழுவிற்கு செல்லுபடியாகாது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தவும் சிறுபான்மை சமூகத்தை ஏமாற்றவுமே இவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்ல இருக்கும் சுமந்திரன் இனவாதத்தை தூண்ட முயல்கிறார். நல்லிணக்கத்தை குழுப்பும் முயற்சியை நிறுத்துமாறு அவரை கோருகிறோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாகவும் கருத்து வெளியிட்ட அவர், இந்த வருடத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதே எமது பிரதான பணியாகும். அது ஐ.ம.சு.முவுக்குறிய பதவியாகும். அதனை சபாநாயகரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அரசியலமைப்புச் சபையில் தமது அதிகாரத்தை தக்கவைப்பதற்காகவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற இத்தனை போராட்டம் நடத்தப்படுகிறது.
அரசியலமைப்பு சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதி, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையுடன் நியமிக்கும் சிறுபான்மை பிரதிநிதி மற்றும் சிவில் பிரதிநிதிகள் மூவர் என அரசியலமைப்புச் சபையில் தமக்கு எதிரான நபர்கள் தெரிவாவதை அரசாங்கம் விரும்பவில்லை.
ஆனால் ஐ.ம.சு.மு தான் யாரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது என முடிவு செய்யும். அதில் வேறு எவருக்கும் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment