அநுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதல் : முன்னாள் விடுதலைப் புலிகள் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 16, 2019

அநுராதபுரம் விமானப் படைத்தள தாக்குதல் : முன்னாள் விடுதலைப் புலிகள் இருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

அநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமனினால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக பிரதிவாதிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம், அவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியை சேர்ந்த பி.அரவிந்தன் மற்றும் ராசவல்லன் தபோரூபன் அகியோருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் விமானப்படையின் பிரபல உறுப்பினர்களாவர்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அதிகாலை அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வான்வழித் தாக்குதல் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குல் என்பன நடத்தப்பட்டன.

இதன்போது, இலங்கை பாதுகாப்பு படையின் 14 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுதாரிகள் 21 பேரும் கொல்லப்பட்டனர்.

அநுராதபுரம் விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சுமார் 400 கோடி ரூபாவிற்கும் அதிக சேதம் ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment