பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
கண்டியில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் வெற்றிக் கொண்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அரசியல் சூழ்ச்சியினால் இந்த நாட்டின் அரசியல் நிலைமை மிக குழப்பகரமாக காணப்பட்டது. இந்த சூழ்ச்சியில் முறையற்ற ரீதியில் இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகற்றப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார். அதன் பின் அரசியலமைப்பை மீறியதாக இந்த நாட்டின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானியை முன்வைத்தார்.
இந்த பாராளுமன்ற கலைப்பு சட்டத்திற்கும், அரசியலமைப்புக்கும் முரணானது என மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து அதற்கு நாங்கள் இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் பெற்று இந்த நாட்டினுடைய அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் நாங்கள் காப்பாற்றியுள்ளோம்.
நியமிக்கப்பட்ட பிரதமருக்கும், பிரதமரால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் எதிராக பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து நாங்கள் 122 உறுப்பினர்களின் பெரும்பான்மையால் நிறைவேற்றியுள்ளோம்.
இலங்கையின் சட்டத்திற்கு அமைய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்ததும், அவரின் கீழ் கொண்டு வந்த அமைச்சரவையும் சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றத்தில் அதை தடை செய்ய கூறி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமித்ததும், அரசாங்கத்தை உருவாக்கியதும் சட்டத்திற்கு முரணானது என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, போலியான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் கூற விரும்புவது என்னவென்றால், பெரும்பான்மை உள்ளவர்கள் கையில் அரசாங்கத்தை ஒப்படையுங்கள். இல்லையேல் உங்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயக சக்தியும், மக்கள் சக்தியும் எங்களிடம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிரிஷாந்தன்
No comments:
Post a Comment