இன்று (03) கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று க.பொ.த. உயர்தரத்திற்கு சித்தியடைய தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை, ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரீட்சையாகும். இப்பரீட்சை, மாணவர்களுக்கு மாத்திரமன்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அவர்கள் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்குமான ஒரு முக்கிய தருணமாகவும் அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பு இந்தப் பரீட்சை பெறுபேறுகளின் மூலமே கிடைக்கவிருக்கின்றது என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். இந்த அருமையான சந்தர்ப்பத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், உங்கள் பெற்றோர்களினதும் பாடசாலை சமூகத்தினதும் எதிர்பார்ப்புக்களை நீங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, இன்றைய பரீட்சை முடிவடைந்தவுடன் நாளைய பரீட்சையை மிகவும் திறமையாக எழுத வேண்டுமென்ற மன உறுதியை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எந்த வேளையிலும், வீணான மனப்பதற்றம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மனதை ஒரு நிலைப்படுத்தி, பதற்றத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். பதற்றம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
பதற்றம் முட்டாள்களுக்குரியது. "நன்கு கற்றுள்ள எனக்குப் பதற்றம் அவசியமில்லை" என்ற மன தைரியத்துடன் நிதானமாக எழுதத் துவங்குங்கள். எப்பொழுதும் நிதானத்தைக் கடைப்பிடித்து விடைகளை எழுதுங்கள். உங்களது எதிர்கால வெற்றி நிச்சயம்.
எதிர்காலத்தில் உயர் கல்விக்கான வாய்ப்பு இந்தப் பரீட்சைப் பெறுபேறுகளின் மூலமே கிடைக்கவிருக்கின்றது என்பதை, மனதில் கொண்டு இந்தச் சந்தர்ப்பத்தை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களின் எதிர்காலம் சிறந்த முறையில் அமையப்பெற வேண்டுமென்ற துஆப் பிரார்த்தனையுடன், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், நாளைய சந்ததியின் சிற்பிகளாகப் பரிணமிக்கப் போகும் நீங்கள் அனைவரும் மிகச் சிறந்த முறையில் இப்பரீட்சையை எழுதி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் இறைவனிடம் உள்ளம் நிறையப் பிரார்த்திக்கின்றேன்.
ஐ.ஏ.காதிர் கான்
No comments:
Post a Comment