தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிதேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கலந்துரையாடும் முகமாக இந்த சந்திப்பு ஜனாதிபதியால் கூட்டப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த, இரா. சம்பந்தன், தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது வெறுமனே சட்ட ரீதியாக நோக்கப்படலாகாது என்றும் இது ஒரு அரசியல் பிரச்சினையாகும் எனவும் வலியுறுத்தினார்.
70 ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டங்களை எடுத்துரைத்த இரா. சம்பந்தன், தொடர்பில் ஒரு அரசியல் தீர்வு எடுக்கப்பட்டது போல இந்த விடயமும் நோக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தினார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலை முயற்சியின் சந்தேக நபரை ஜனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுவித்ததனை எடுத்துக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், இந்த கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை ஜனாதிபதி முன்மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பல வருடங்களாக சிறையில் வாடும் இந்த கைதிகளை மனைவிமார், குழந்தைகளின் பரிதாபமான நிலைமையினை விளக்கி கூறிய இரா. சம்பந்தன் கால தாமதம் இல்லாமல் இந்த கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பல நாடுகளில் இப்படியான பிரச்சினைகளிற்கு அரசியல் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன என்றும் இந்த கைதிகள் விடயத்தில் அவ்வாறான முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலமையை கருத்திற் கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment