ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதாது அதற்கு மேலாக சேவை செய்யவேண்டும் - ஆளுநர் றெஜினோல்ட் குரே - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதாது அதற்கு மேலாக சேவை செய்யவேண்டும் - ஆளுநர் றெஜினோல்ட் குரே

வட மாகாணத்தில் கல்வியை வளர்ச்சியடைய செய்வதற்கு ஏனைய மாகாணங்களுக்கு அப்பாற்பட்ட சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். இது தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்தி வருவதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வசாவிளான் வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். 

நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், ஏனைய மாகாணங்களில் உள்ள சட்டம் இங்கே போதாமல் இருக்கிறது. கல்வித்துறையினை ஒழுங்குபடுத்துவதற்கு கடந்த 30 வருட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பகுதிக்கு விசேடமான சட்ட திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை எழுகின்றது. அது தொடர்பில் நாம் அனைவரும் ஒன்றாக பேசி முடிவு செய்யவேண்டும்.

யாழ்ப்பாணத்தின் பெருமையை கூறும் கல்வியை முன்னோக்க ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டும் வேலை செய்தால் போதாது அவர்கள் அதற்கு மேலாக சேவை செய்யவேண்டும். ஆசிரியர்கள் கூலிக்காக வேலை செய்யக்கூடாது அவர்களுக்கு தூர நோக்கம் வேண்டும். மாணவர்கள் மீது அன்பு, கருணை இரக்கம் காட்டவேண்டும். பாடசாலைக்கு வரும் மாணர்வகளுக்கு ஒரு தாய் தந்தையராக அவர்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே மாணவர்களை கல்வியில் முன்னேற்றம் செய்ய முடியும். 

இப்பாடசாலையினை ஆரம்பித்த வேலுப்பிள்ளை ஐயா போன்று பலர் முற்காலத்தில் சமூக அக்கறையுடன் ஆசிரியர் சேவை செய்திருக்கின்றனர். அவர்களை உதாரணமாக நாங்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கல்வியை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் நன்மை கருதி கடுமையான தீர்மானங்களை அதிகாரிகள் எடுக்க வேண்டும். தவறு செய்தால் முதலில் போதனை கொடுக்க வேண்டும் அடுத்து உத்தரவு. அதனையும் பொருட்படுத்தாதோருக்கு தண்டணை வழங்குவது கட்டாயமாகின்றது என்றும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் யூட் மரியரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் பா.சத்தியசீலன், பிரதேச செயலாயளர் சிவசிறி, பிரதி கல்வி பணிப்பாளர் தவமனோகரன் வலி வடக்கு பிரதேசசபை தலைவர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment