இலங்கை கிரிக்கெட் அணியில் வட மாகாண இளைஞர்களும் இணைந்துகொள்ளும் வகையில் ஊக்குவிப்பது அவசியம் - வட மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

இலங்கை கிரிக்கெட் அணியில் வட மாகாண இளைஞர்களும் இணைந்துகொள்ளும் வகையில் ஊக்குவிப்பது அவசியம் - வட மாகாண ஆளுநர்

இலங்கை கிரிக்கெட் அணியில் வட மாகாண தமிழ் இளைஞர்களும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இங்குள்ள இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பது அவசியம் என்று வட மாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாராட்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் நேற்று (31) இரவு நடைபெற்ற வர்ண இரவுகள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் ஆளுநர் உரையாற்றுகையில், யாழ் குடாநாட்டிலே முன்னொரு காலத்தில் மாணவர்கள் எவ்வாறு கல்வி பயின்றார்கள் என்பதை எனது பெற்றோர் எனக்கு சிறு வயதில் சொல்லிக் கொடுத்திருக்கின்றார்கள். வீட்டில் வெளிச்சம் இல்லாத இரவுகளில் வீதி விளக்குகளின் வெளிச்சத்திலிருந்து கல்வி கற்றுள்ளார்கள். 

அவ்வாறு கல்வி கற்றவர்கள்தான் இன்று தென்பகுதியில் பெரிய உத்தியோகங்களில் இருக்கின்றார்கள் .அவ்வாறு ஒரு கஷ்டமான காலத்தில் கல்வி முன்னேற்றமாக இருந்தது. ஆனால் கடந்த சில காலங்களில் கல்வி பின்னோக்கி சென்றுள்ளது. ஆனால் தற்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எதிர் வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் தற்போது ஆசிய கூடைப் பந்தாட்டத்தை சுவீகரித்த தர்சினி போன்றவர்கள் வட மாகாணத்திலிருந்தே இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்து தந்தார்கள். அதேபோன்று இங்கே நான் கண்ணால் கண்டேன் பலர் தேசிய மட்டத்தில் பல பதக்கங்களை பெற்றிருக்கின்றார்கள். அவர்களை மேலும் வளப்படுத்த வேண்டும். 

சர்வதேச அணிகளுடன் விளையாடக்கூடிய வகையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசியாவில் விளையாடி இலங்கைக்கு பெருமையை தேடித்தந்த செல்வி தர்சினியை பாராட்டும் அளவுக்கு எனக்கு தமிழ் மொழி தெரியாது. அதனால் கவலை அடைவதாக தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் பிழையான கருத்துக்களை தெரிவித்து அவர்களை பிளவு படுத்த நினைக்கின்றார்கள். தமது தலைமைத்துவத்தை தக்க வைக்க நினைக்கின்றார்கள். அவர்களின் பிழையான தகவல்களை கருத்தில் கொள்ளாது சரியானவற்றை இனங்கண்டு செயற்படுமாறு உங்கள் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நந்தகுமார், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.அகிலதாஸ் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment