கல்வி எனும் ஆயுதம், எமது வாழ்வை முன்னேற்றிச் செல்லும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

கல்வி எனும் ஆயுதம், எமது வாழ்வை முன்னேற்றிச் செல்லும் - அமைச்சர் பைஸர் முஸ்தபா

இன்று எமக்குள்ள ஆயுதம் கல்வியாகும். இந்த ஆயுதத்தை நாம் சரியாகப் பயன்படுத்தினால் எமது வாழ்வில் முன்னேறிச் செல்ல முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பு - பொரளை, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இஸ்லாமிய தின நிகழ்வில் 30ஆம் திகதி நடைபெற்றது. இதில்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் இச்சிறப்பு நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றும்போது கூறியதாவது, கல்வி எமக்கொரு ஆயுதம். அந்த ஆயுதத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது நல்ல முறையில் இயங்கினால், எமது வாழ்வில் நாம் உயர்ந்த ஸ்தானத்திற்குச் செல்ல முடியும். 
நான் மீண்டும் அமைச்சரான பிறகு கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வு இதுவாகும். இதனையிட்டு நான் பெருமைப்படுகின்றேன். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கல்வி தொடர்பான விடயங்களில் எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். இதுதான் இன்றைய எமது தேவையாக உள்ளது. 

பெற்றோர்கள் மாணவர்களைக் கல்வியின்பால் ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு வைத்தியராக, ஒரு பொறியியலாளராக எனது பிள்ளை வரவேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் வர வேண்டும். இதைத்தான் அமைச்சர் என்ற வகையில் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பாடசாலையில், மூவின சமூக மக்களினதும் பிள்ளைகள் எவ்விதக் கசப்புணர்வுகளுமின்றி, மிக நீண்ட காலந்தொட்டு ஐக்கியமாகக் கல்வி கற்று வருகின்றார்கள். இவ்வாறான சகவாழ்வை நான் இந்தப் பாடசாலையில் காண்கின்றேன். 
சாதி, சமய பேதங்களின்றி இப்பாடசாலை மாணவர்கள், இங்கு கல்வி கற்கும் ஆர்வத்தைக் காணும்போது, நான் பிரமித்துப் போகின்றேன். 

அவ்வாறான ஒரு சிறந்த ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த இப்பாடசாலை நிகழ்வொன்றில் எனக்குக் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தமையையும் நான் பெருமையாகக் கருதுகின்றேன். 

இப்பாடசாலை, தொடர்ந்தும் வளர்ச்சிப் பாதையில் மிக நீண்ட தூரம் செல்ல வேண்டும். இதற்கு, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என, அனைவரும் தங்களது ஆதரவுகளையும் ஒத்துழைப்புக்களையும் மென்மேலும் வழங்க முன் வரவேண்டும் என்றார்.

ஐ. ஏ. காதிர் கான் 

No comments:

Post a Comment