ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்தும், முன்னாள் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கிலும் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய மக்கள் பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் பேரணியை நடத்துகின்றன.
நாடு முழுவதிலுமிருந்து 5,000 பஸ்களில் மக்கள் வருகைதரவிருப்பதுடன், புதிய ஆட்சிக்கு தமது ஆதரவை அவர்கள் தெரிவிப்பார்கள் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு பத்தரமுல்லையில் நேற்று (01) நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்தானந்த அளுத்கமகே, வாசுதேவ நாணயக்கார மற்றும் ரோஹித்த அபேகுணவர்த்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு உட்பட்ட ரீதியில் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளார். இது அரசியலமைப்புக்கு அமைவானது என பதில் சட்ட மா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான நிலையில் புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தும் நோக்கிலும், ரணில் தலைமையிலான குழுவினரை வீட்டுக்கு அனுப்பும் நோக்கிலும் இந்த மக்கள் பேரணி நடத்தப்படுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாட்டின் மீது அக்கறையுள்ள அனைவரும் நவம்பர் 5ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடுமாறும் அவர் அழைப்புவிடுத்தார்.
கடந்த ஐ.தே.க ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதில் கலந்துகொள்வார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு நாடு முழுவதிலும் 5,000க்கும் அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் தமது ஆதரவாளர்களை நவம்பர் 5 ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து வருவார்கள். 'நாட்டைப் பாதுகாக்கும் மக்கள் சக்தி' எனும் தொனிப்பொருளில் இந்த மக்கள் பேரணி நடத்தப்படவுள்ளது என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த சுசில் பிரேமஜயந்த, புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக்கொண்டுள்ள சபாநாயகர், அவருக்கு உரிய ஆசனங்களையும் அலுவலகத்தையும் ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் 16ஆம் திகதிவரை ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார். அரசியலமைப்புக்கு அமைய அதற்கு முன்னர் ஒரு தினத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது என்றார்.
புதிய அரசாங்கத்துக்குப் போதிய பெரும்பான்மை இருப்பதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அவசரத்துக்காக அரசாங்க நிர்வாகத்தை நாம் முன்னெடுக்கப்போவதில்லையென்றும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment