மலையகத்தில், மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளில் அதிக பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஹட்டன் – நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மலையக வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நேற்று மாலை திறக்கப்பட்ட 5 வான்கதவுகளில் ஒன்று தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவம் கேட்டுக் கொண்டுள்ளது.
அதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின், அயகம், பலாங்கொடை, இபுல்பே, கலவான, எலபாத்த மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
No comments:
Post a Comment