ஐக்கியமானதோர் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு தேசிய மத்தியஸ்த சபை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் பணி பாராட்டத்தக்கது என்று ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (03) முற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற 28ஆவது தேசிய மத்தியஸ்த தின தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.
கூட்டுப்பண்பு தளர்வுறுகின்ற இடத்தில் ஐக்கியமும் நாணயமும் அற்றுப் போகின்றன என்று ஜனாதிபதி தெரிவித்தார். சமய தத்துவதங்களுக்கு ஏற்ப சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வது குறித்து மக்கள் மத்தியில் நல்ல மனநிலையினை கட்டியெழுப்புவதும் சட்ட கட்டமைப்புக்குள் ஒழுக்கம், சட்டம் மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்புதல் ஆகிய இரண்டு விடயங்களையும் அடிப்படையாகக் கொண்டு விரிந்த பணிகளை மேற்கொண்டு வரும் தேசிய மத்தியஸ்த சபை, முரண்பாடுகளை தீர்த்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்காக மேற்கொண்டுவரும் பணியை ஜனாதிபதி பாராட்டினார்.
இன்று சமூகத்தில் ஆழ ஊடுருவியிருக்கும் களவு, வீண்விரயம் மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்காக கிராம மட்டத்திலும் மேலிருந்து கீழ் அனைவருடையவும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மத்தியஸ்த சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டது முதல் 28 வருடங்களாக தமது திறமைகளை அர்ப்பணித்து, தன்னார்வமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசிய பணியை நிறைவேற்றிவரும் மத்தியஸ்த சபை தலைவர்கள் உட்பட அனைத்து மத்தியஸ்த சபை உறுப்பினர்களையும் கௌரவிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் மத்தியஸ்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
மத்தியஸ்த சபையின் www.midiation.com என்ற இணையத்தளம் ஜனாதிபதியினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப மத்தியஸ்த சபையில் சேவைக்காக தெரிவுசெய்யப்பட்டு இன்னும் தொடர்ந்து சேவை செய்துவரும் 07 மத்தியஸ்தர்கள் இதன்போது விசேட பாராட்டை பெற்றுக்கொண்டனர்.
மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஹெக்டர் யாப்பாவினால் மத்தியஸ்த சபை கையேடு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அமைச்சர்களான தலதா அதுகோரள, விஜயபால ஹெட்டியாரச்சி, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சின் பதில் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஹெக்டர் யாப்பா, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் செயலாளர் ராஜினி அத்தபத்து ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment