அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கண்டி மற்றும் கொழும்பு மகசின் சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் 20 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தமக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அல்லது தமக்கு புனர்வாழ்வளித்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி 8 தமிழ் அரசியல் கைதிகளும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இன்று (03) சந்தித்தார்.
இதேவேளை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் இன்றைய தினம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
No comments:
Post a Comment