நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு 2019 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகள் உள்வாங்கப்பட வேண்டியது அவசியம். இல்லையேல் விரைவில் நாடு மீண்டுமொரு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடுமென்றும் தேசிய பொருளாதார சபை உறுப்பினர் பேராசிரியர் லலித் சமரகோன் நேற்று (04) எச்சரித்தார்.
உடனடி பிரச்சினையிலிருந்து வெளிவருவதற்கான குறுகிய கால தீர்மானங்கள் தற்போதைக்கு அவசியம் என்கின்றபோதும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை வடிவமைப்பது நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்துக்கு பொருத்தமாக அமையாது என்றும் பேராசிரியர் விளக்கமளித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் முகம்கொடுக்கும் வகையில் நாட்டுக்கென உறுதியான, நீண்டகாலத்தை மையமாகக் கொண்ட அடிப்படை பொருளாதார கொள்கை அவசியமென்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடத்தப்பட்டது. இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எத்தகைய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதென ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"பொருளாதார நெருக்கடிக்கு கொள்கையடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு மேலும் காலம் தாமதிக்க முடியாது. தாமதித்தால் நாடு விரைவில் மீண்டுமொரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும். தீர்வுகள் தற்போதைக்கு குறுகிய காலத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும் 2019 வரவு செலவுத் திட்டத்திற்கு இவை பொருந்தமாட்டாது. எனவே எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மத்திம மற்றும் நீண்டகால தீர்வுகள் உள்வாங்கப்பட வேண்டும்," என்றும் பேராசிரியர் லலித் சமரகோன் கூறினார்.
இதேவேளை, கடன் வழங்கிய முகவர் நிலையங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கும் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மீளப்பெறுவதற்கும் காத்துக்கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார அத்திவாரம் ஸ்திரமடைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பாரிய பிரச்சினைகளுக்கு நாடும் மக்களும் முகம் கொடுக்க நேரிடுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான உடனடி தீர்வாக வரி அறவிடுதல், வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்தல், ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகிய விடயங்களில் தற்போது நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் தேசிய பொருளாதாரசபை ஆகியன இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் நாடு மிகப் பெரிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தெளிவான செயல்திட்டமொன்று நாட்டுக்கு அவசியமென்றும் அவர் விளக்கமளித்தார்.
இன்றைய சூழ்நிலையில் வரி அறவிடுவது தவிர்க்க முடியாதது. என்றாலும் இந்த வரி சாதாரண மக்களை பாதிக்காத வகையில் உயர்மட்டங்களிலிருந்து அறவிடப்பட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது நாட்டில் 7.3 டொலர் பில்லியன் ரூபாவே கையிருப்பாக உள்ளது. இக் கையிருப்பை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. உடனடியாக சந்தையில் விடுவிப்பதற்காக மத்திய வங்கி 200 டொலர் மில்லியன் ரூபாவை தயாராக வைத்துள்ளதென்றும் அவர் கூறினார்.
நாட்டின் உள்ளூர் உற்பத்திக்கு சிறந்த சந்தைவாய்ப்பு இருக்குமானால் எந்தவொரு வெளித் தாக்கங்களும் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்காதென்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடிய தேசிய பொருளாதார சபை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் வங்கிகள், தனியார் துறையினர், வர்த்தக அமைப்புக்கள்,சம்மேளனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனும் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளுடனும் விரிவாக கலந்துரையாடி பல்வேறு யோசனைகளை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment