மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கம் சுதந்திரக் கட்சிக்கு கிடையாது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

எத்தகைய அரசியல் நோக்கத்திற்காகவும் மாகாண சபை தேர்தலை தாமதமாக நடத்தும் நோக்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது காலதாமதமாவதை ஸ்ரீல.சு. கட்சி எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீல. சு. கட்சி புதிய முறைப்படி தேர்தலை நடத்துவதையே கொள்கையாகக் கொண்டுள்ளது. எனினும் ஏனைய சில கட்சிகள் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டும் என தெரிவிக்கின்றன. எனினும் 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இன்று வரை ஸ்ரீலங்கா சு. கட்சி நிலையான கொள்கையிலேயே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை மாத்திரம் பழைய முறையில் நடத்தவேண்டுமென்று கோருவது விந்தையாக உள்ளது. இது முற்றிலும் மாறுபட்ட கொள்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார். ஸ்ரீல. சு. கட்சியின் செய்தியாளர் மாநாடு (04) நேற்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அமைச்சர், அரசியலமைப்பு பேரவை, பாராளுமன்ற தேர்தலையும் புதிய கலப்பு முறையிலேயே நடத்தவேண்டுமென தீர்மானித்துள்ளது.

மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவேளையில் அவர் இதனை உறுதியாக தெரிவித்தார்.

இதற்கிணங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐந்து பேர்கொண்ட குழு நியமிக்கப்பட்டு இரண்டு மாதகாலமாக கலந்துரையாடி அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளது. இதற்கிணங்க அதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவேண்டிய அவசியமில்லை.

எனினும் பழைய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டுமென்றால் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தனியான சட்டதிட்டங்களை உருவாக்க நேரிடும்.

ஸ்ரீல. சு. கட்சியும் ஐ. தே. கட்சியும் தமது தேர்தல் கொள்கை பிரகடனத்திலேயே புதிய தேர்தல் முறையை ஆதரித்தது. விருப்பு வாக்கு முறை திருப்தியற்றது என்பதாலேயே சகல கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தன.

குறிப்பாக பாராளுமன்றத்தில் 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதற்காகவே ஸ்ரீல. சு. கட்சி 3ல் 2 வாக்கை அளித்தது. அப்போது ஐ.தே. கவில் 46 பேர் மட்டுமே இருந்தனர். அப்போது ஏனைய அரசியல் கட்சிகளும் இணக்கப்பாடு தெரிவித்தன.

இதற்கிணங்க ஸ்ரீல.சு. கட்சி வெறுமனே புதிய முறையில் தேர்தல் நடத்தவேண்டுமென கூறவில்லை. ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் ஏனைய கட்சிகளின் கொள்கை மற்றும் கடந்த முறை நடந்த மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை கவனத்திற்கொண்டே இந்த உறுதியான நிலைப்பாட்டிலுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment