அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் ஒலுவில் துறைமுக பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

அமைச்சர் ஹக்கீமின் முயற்சியினால் ஒலுவில் துறைமுக பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு

ஒலுவில் துறைமுக பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரமான தீர்வை காண்பதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையில், வேற்றுமைகளை புறந்தள்ளி, அனைவரும் கருத்தொருமைப்பாட்டுடன் உரிய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக குழுவொன்றினை அமைப்பதன் அவசியத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தியதை அடுத்து அதன் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதென முடிவுசெய்யப்பட்டது. 

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பினால் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினை மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பையேற்று, விஷேட விமானமூலம் அவருடன் வருகைதந்த துறைமுகம் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, துறைமுக அதிகார சபை தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க மற்றும் பொறியியலாளர்கள், அமைச்சின் உயரதிகாரிகள் புதன்கிழமை (03) ஒலுவிலில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு நிலைமையை நிலைமையை நேரில் கேட்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
ஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கிலான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான கருத்துகளையும் தீர்வுத்திட்டங்கள் குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.

கடலரிப்பினால் அழிந்துபோகும் நிலங்களை மீட்பதற்கு, கடல் மண்ணை அகழ்ந்து கடற்கரையை நிரப்புவதற்கு சக்திவாய்ந்த பாரிய அகழ்வு கப்பலொன்றை (Trailer suction hopper dredger) கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் டென்மார்க் நாட்டின் டெனிடா (Denita) நிறுவனம் அதற்க்கு செலவாகும் தொகையில் 50 சதவிகித நிதியை வழங்க முன்வந்துள்ளது. எஞ்சியுள்ள 50 சதவிகித பணத்தை அரசாங்கம் பொறுப்பேற்று குறித்த இயந்திரத்தை 4 மாதங்களுக்குள் கொள்வனவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இதனை விளம்பரப்படுத்தவும், சர்வதேச கேள்விமனு கோரவும் இந்தக்காலக்கேடு அவசியமாகும்.
மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் ஒலுவிலை அண்டிய பிரதேசங்களில் பாரம்பரிய கரைவலைபாடு மீன்பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் அமைய வேண்டுமென்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், மண்ணரிப்பு அபாயம் வடக்கு நோக்கி நிந்தவூர் வரை காணப்படுவதாகவும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குரிய காணியிலும் பல ஏக்கர் காணிகளை இழந்துவருவதாக அதன் துணைவேந்தர் தம்மிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்றைய எங்களது வருகையானது பிரச்சினையை வெறுமனே சமாளித்துவிட்டு செல்வதுதான் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் மீன்பிடித்துறைமுகமாக மாத்திரமல்லாமல் வர்த்தக துறைமுகமாக மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரதேசத்தின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துமென்றார்.
துறைமுக அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள அல்ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார். அத்துடன், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபாநகர் துறைமுக வீட்டுத்திட்ட காணிகளை உடனடியாக ரத்துச்செய்து, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு வழங்குமாறு இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.இதன் போது பாதிக்கப்பட்ட மக்களும் தமது பக்க நியாயங்களை முன்வைத்தனர்.

இந்த உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்க, தொழில்நுட்ப பணிப்பாளர் சந்திரகாந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாச்சியாதீவு பர்வீன்

No comments:

Post a Comment