திட்டமிட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (04) முற்பகல் 11.55 மணியளவில், அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருவல இரும்பு கூட்டுத்தாபனத்திற்கு அருகில், மைலங்கமபார பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் சந்தேகநபரான, பண்டா (30) என அழைக்கப்படும், ரணசிங்க ஆரச்சிகே ஹசித எனும் குறித்த சந்தேகநபர், பொலிஸ் அதிகாரிகள் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு கருதி பொலிஸார் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது காயமடைந்த சந்தேகநபர், ஒருகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், தற்பொழுது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தேடப்பட்டு வரும் ‘மாகந்துர மதூஷ்’ மற்றும் ‘அங்கொடை லொக்கா’ என அழைக்கப்படும் பாதாள குழு உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய கைத்துப்பாக்கியை, திட்டமிட்ட குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலிஸ் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment