பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய் எனத் தெரிவித்து கிளிநொச்சியில் இன்று 01-10-2018 கண்டன, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் 10.00 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், சட்டப் பூட்டினை உடை, அரசியல் தீர்மானம் எடு, நல்லிணக்கத்துக்கான முதலாவது படி அரசியல் கைதிகளின் விடுதலையே, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே இலங்கையில் நல்லிணக்கம், எதற்காக இன்னும் அரசியல் கைதிகளுக்குத் தண்டனை?, ஏன் இன்னும் அரசியல் கைதிகள்?, விடுதலை செய் அரசியல் கைதிகளை, வெற்றி கொள் தமிழர் மனங்களை. போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததோடு கோசங்களும் எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்துக்கொண்டு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்டுத்த முடியாது.
இலங்கையில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் அரசியல் தீர்மானங்களின் மூலம் விடுவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் பலவுண்டு. விடுதலை இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுகளின்போதும் இலங்கை – இந்திய உடன்படிக்கையின்போதும் அரசியல் கைதிகளின் விடுதலை முதன்மைக் கரிசனையில் எடுக்கப்பட்டு அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் சாத்தியப்படுத்தப்பட்டது.
அப்படியிருக்கும்போது இப்போது தடுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை மட்டும் சட்ட ரீதியாக அணுக முற்படுவது என்பது நிச்சயமாக நீதியற்றதேயாகும். இதற்குக் காரணமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றாமல் அரசாங்கம் அதை நீடிப்பது அரசியல் உள்நோக்கமுடையதேயன்றி வேறெதுவாக இருக்க முடியும்? எனக் குறிப்பிட்டார்.
இப் போராட்டத்தில் கலந்துகொண்ட இணைந்த வட,கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள் போரை நடத்திய மகிந்த ராஜபக்ஸவால் 12 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய முடியும் என்றால் ஏன் இந்த அரசினால் முடியாது? தமிழ் மக்களின் அதிக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இவ்வாறு நடந்துகொள்வது மிகவும் அநீதியான செயற்பாடாகும் எனக் குறிப்பிட்டார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கைதிகளின் இரண்டு தாய்மார் தங்களின் பிள்ளைகளை அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் சிறைகளில் நாளாந்தம் மிக மோசமான மன ரீதியான பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர் எனவே அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு, அவர்களின் நலன்ங்கள் கருதி விடுவிக்குமாறு மிகவும் உருக்கமாக வேண்டிக்கொண்டனர்.
No comments:
Post a Comment