கலைஞர் கருணாநிதி முன்னாளில் காட்டிய கரிசனை பின்னாளில் காட்டவில்லை : பா.அரியநேத்திரன் - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

கலைஞர் கருணாநிதி முன்னாளில் காட்டிய கரிசனை பின்னாளில் காட்டவில்லை : பா.அரியநேத்திரன்

தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் மறைந்த அமரர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் முன்னாளில் காட்டிய அக்கறை கரிசனை பின்னாளில் இருந்ததில்லை என்ற குறை ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த திராவிட முன்னேற்ற கழக ஊடகப் பேச்சாளரும் வழக்கறிஞருமான இராமகிருஷ்ணன் அவர்களுடனான சந்திப்பு கடந்த 28/09/2018 திருகோணமலை இலங்கை தமிழரசு கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து கூறுகையில், 1979 ம் ஆண்டு தொடக்கம் ஈழத்தமிழர் விடுதலை அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகள் கட்சிகள் பல்வேறு உதவிகள் கரிசனைகள் காட்டியது உண்மை. அதில் மறைந்த அமரர் கலைஞர் கருணாநிதி அவர்களும் அவர்சாந்த கட்சித் தொண்டர்களும் எமக்காக குரல்கொடுத்ததையும் மகாநாடுகளை நடத்தியதையும் நாம் மறக்கவில்லை. 

ஆனால் பின்னாளில் விடுதலைப்போராட்டம் மரபுபடையணியாக வளர்ச்சியடைந்து போராட்டம் இடம்பெற்ற இறுதி காலப்பகுதியில் மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் போராட்டத்தை தடுப்பதற்கான செயல்பாட்டையோ அதற்கான அழுத்தங்களையோ பிரயோகிக்கவில்லை என்ற ஒரு பார்வை ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டு.

குறிப்பாக தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா தமிழ் நாட்டில் வைத்தியசாலைக்காக அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற அனுமதி கேட்ட போது கலைஞர் அதற்கான அழுத்தங்களையோ சம்மதத்தையோ கொடுக்காமல் மௌனம் காத்தமை, அடுத்து 2009 ஏப்ரல் மாதங்களில் உக்கிரமான மோதல் பல்பீரங்கி தாக்குதல்களை இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது மேற்கொண்ட வேளை அதை நிறுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் அவரின் மகள் கனிமொழி ஆகியோருடன் தொடர்பு கொண்டு உடனடியாக ஓர் போர்நிறுத்தம் மேற்கொண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என்று கெஞ்சி கேட்டபோது அதை செய்யவில்லை என்ற மனக்குமிறல் எம்மிடம் உள்ளது.

இதைப்போல் முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பதவி வகித்த காலத்தில் நாம் எதிர்பார்த்த ஈழத்தமிழர் அரசியல் தீர்வு விடயத்திலும் முக்கியத்துவம் இருந்ததில்லை என்பதும் எம்மவர்கள் மத்தியில் மனக்குறைகள் உண்டு. பொதுவாகவே தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைமைகள் எமக்காக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதை நாம் மறக்கவில்லை. 

ஆனால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரே குரலில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஒன்றிணைந்து அழுத்தங்களை ஒற்றுமையாக கொடுக்க கூடியதாக இதுவரை இல்லை இனியாவது அப்படி செய்தால் நல்லது.

இலங்கை – இந்திய உடன்படிக்கை கடந்த 1987 யூலை 29ல் ஏற்பட்டது அதனூடாக வடக்கு கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக அங்கீகரித்து 19 வருடங்களாக ஒரு நிர்வாக மாகாணமாக இருந்து வந்தது அதன்பின் மகிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கடந்த 2006 ஒக்டோபர் 16ம் திகதி மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த காரணத்தால் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய மத்திய அரசுக்கு தமிழ் நாட்டு அரசியல் தலைமைகள் அழுத்தம் கொடுத்து மீண்டும் வடக்கு கிழக்கு ஒரு மாகாணமாக அங்கீகரிக்க வேண்டும் என எந்த அழுத்தங்களையும் முன்னாள் தமிழ் நாட்டு முதல்வர் கலைஞர் கருணாநிதி உட்பட எவருமே செய்யவில்லை இவை எல்லாம் கடந்த காலம் நாம் அறிந்த விடயங்கள்.

தற்போது இங்கு வருகைதந்திருக்கும் திராவிட முன்னேற்ற கழக முக்கிய பிரமுகரான நீங்கள் (இராதாகிருஷ்ணன்) கடந்தவைகள் நடந்தது நடந்ததாக இருக்கட்டும் மேற்கொண்டு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் ஆராய இந்த சந்திப்பை நடத்துவதாக கூறினீர்கள். நல்ல விடயம் இவ்வாறு கடந்த 1979ம் ஆண்டு தொடக்கம் இப்படித்தான் தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொரு தடவையும் எமக்கு பல வாக்குறுதிகளை தந்தனர்.

தமிழ் நாட்டு முதலமைச்சர்கள், இந்திய பிரதமர்கள் எல்லோருமே எமக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் செயற்படவில்லை. 70 வருடங்களாக எமக்கான ஒரு விடிவு வரவேண்டும் என பல வழிகளில் போராடி வருகின்ற ஒரு சமூகமாக ஈழத்தமிழர்கள் உள்ளோம். ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இந்திய அரசு கடந்த காலங்களில் உதவிகள் செய்த வரலாற்றை நாம் மறக்கவில்லை. 

தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளையும் மறக்கவில்லை. இருந்தும் சில தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் நாம் பட்ட துன்பம், துயரம், இனஅழிப்பு சம்பவங்களை நிறுத்தக் கூடிய வலிமை இருந்தும் அதைச் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது எனது கருத்துமட்டுமல்ல அனேகமான தமிழ்மக்களின் ஆதங்கம்.

எதிர்காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ள க.ஸ்டாலின் அவர்கள் ஈழத்தமிழர் அவலங்களை உணர்ந்தவர் என்பதால் அவர் எமக்கான அரசியல் நிரந்தர தீர்வு வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் கிடைக்க ஏதாவது நன்மை செய்தால் நல்லது எனவும் மேலும் கூறினார்.

இந்த சந்திப்பின்போது இலங்கைதமிழரசு கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா உட்பட திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், மாநகர முதல்வர் என ஏராளமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது,

No comments:

Post a Comment