நகர அபிவிருத்தி அதிகார சபையின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தொழில்முறை கருத்தாய்வின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (02) கொழும்பில் இடம்பெற்றது.
1978 ஒக்டோபர் முதலாம் திகதி விசேட சட்டத்தினால் நிறுவப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை, நகர்ப்புற சூழலை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை வகிக்கும் நாட்டின் உயர்தர திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாகும்.
நல்லாட்சி கொள்கைகளின் அடிப்படையில் நிலையான நிதி நிர்வாகத்தை பேணியவாறு நிர்மாணத்துறையின் ஊடாக தேசியப் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கி வருகின்றது.
“நகர அபிவிருத்தி அதிகார சபையின் 40 வருட கடந்த காலமும் நிகழ்கால மற்றும் எதிர்கால பயணமும்” என்ற தொனிப்பொருளில் இந்த தொழில்முறை கருத்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், சிரேஷ்ட நகர நிர்மாணக் கலைஞர் விருதுபெற்ற பேராசிரியர் விலீ மெண்டிஸ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார குடித்தொகை பரம்பல் கற்கைப்பிரிவின் விருதுபெற்ற பேராசரியர் டபிள்யு. இந்திரலால் டி சில்வா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எல். குணருவன், அபிவிருத்தி உபாயமார்க்கங்கள், சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் அனுஷ்க விஜேசிங்க மற்றும் சிங்கப்பூர் யூ.ஆர்.ஏ. நிறுவனத்தின் ஆலோசகர் ஆகியோரின் பங்களிப்பில் இந்த கருத்தாய்வு இடம்பெற்றது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிக்குழாம் சார்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கலாநிதி ஜகத் முனசிங்க மற்றும் மாநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நினைவுப் பரிசினை வழங்கியதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இதன்போது விசேட நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமித ரத்நாயக்க, காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரொஷான் குணவர்தன உள்ளிட்ட அதிதிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment